கர்நாடக சட்டசபைத் தேர்தல்: அண்ணாமலை பிரசாரம் செய்ய தடை விதிக்க காங். கடிதம்
|கர்நாடக சட்டசபைத் தேர்தலில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிரசாரம் செய்ய தடை விதிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் காங். கடிதம் அளித்துள்ளது.
பெங்களூரு,
224 உறுப்பினர்களை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் செய்யும் பணி கடந்த 13-ந் தேதி தொடங்கி 20-ந் தேதி வரை நடைபெற்றது. இதில் மொத்தம் 3 ஆயிரத்து 632 வேட்பாளர்கள் 5 ஆயிரத்து 102 மனுக்களை தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்கள் மீதான பரிசீலனை கடந்த 21-ந் தேதி நடைபெற்றது. இதில் 678 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் 3 ஆயிரத்து 44 மனுக்கள் ஏற்கப்பட்டன. மனுக்கள் வாபஸ் பெற நேற்று கடைசி நாள் ஆகும். இதையடுத்து தேர்தல் ஆணையம் இறுதி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் சட்டசபை தேர்தல் களத்தில் 2,613 வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர். இந்த தேர்தலுக்கான பிரசாரத்தை அனைத்து கட்சிகளும் தொடங்கி உள்ளன.
இந்நிலையில் கர்நாடக சட்டசபைத் தேர்தலில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிரசாரம் செய்ய தடை விதிக்க என்று தேர்தல் ஆணையத்திடம் கர்நாடக காங்கிரஸ் கட்சியின் சார்பில் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. காவல்துறையில் இருந்தபோது கர்நாடகாவில் சில பகுதிகளில் அண்ணாமலை பணியாற்றியதாகவும், தேர்தல் பணியில் உள்ள காவல்துறையினர் அவருக்கு ஆதரவாக செயல்பட வாய்ப்புள்ளதாகவும் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.