< Back
தேசிய செய்திகள்
கோவில் பிரசாதம் சாப்பிட்ட 51 பேருக்கு உடல்நலம் பாதிப்பு - 5 பேர் கவலைக்கிடம்
தேசிய செய்திகள்

கோவில் பிரசாதம் சாப்பிட்ட 51 பேருக்கு உடல்நலம் பாதிப்பு - 5 பேர் கவலைக்கிடம்

தினத்தந்தி
|
23 May 2024 6:57 AM IST

கோவில் திருவிழாவின் போது பிரசாதம் சாப்பிட்ட 51 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பெலகாவி,

கர்நாடகாவில் கோவில் திருவிழாவின் போது பிரசாதம் சாப்பிட்ட 51 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் உள்ள ஹூலிகட்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற பைரேஸ்வர் கரிம்மா தேவி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் தற்போது வருடாந்திர உற்சவ திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திருவிழாவின்போது பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த பிரசாதத்தை சாப்பிட்ட சிலருக்கு வயிற்றுவலி, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.

இதையடுத்து உடல்நலம் பாதிக்கப்பட்ட 51 பேர் உடனடியாக அருகில் உள்ள சாவதட்டி மருத்துவமனை மற்றும் பெலகாவி மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் 5 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ள நிலையில் அவர்கள் தார்வாட் மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து ஹூலிகட்டி கிராமத்தில் முகாமிட்டுள்ள சுகாதாரத்துறை அதிகாரிகள், கிராம மக்களின் உடல்நிலையை கண்காணித்து வருகின்றனர்

மேலும் செய்திகள்