< Back
தேசிய செய்திகள்
கேரளா: வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
தேசிய செய்திகள்

கேரளா: வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு

தினத்தந்தி
|
24 April 2024 3:40 PM IST

வெடிகுண்டுகள் கண்டெடுப்பு சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலத்தில் உள்ள 20 தொகுதிகளுக்கும் வரும் 26ம் தேதி (நாளை மறுநாள்) ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடைய உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் 9 இரும்பு வெடிகுண்டுகள் கிடப்பதை இன்று காலை பொதுமக்கள் பார்த்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் போலீசார் மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் வயலில் வாளியில் வைக்கப்பட்டிருந்த 9 இரும்பு வெடிகுண்டுகளையும் கைப்பற்றினர்.

அதிபயங்கர விளைவை ஏற்படுத்தும் இந்த 9 இரும்பு வெடிகுண்டுகளையும் செயலிழக்க செய்யும் பணியில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஈடுபட்டனர். இதன் காரணமாக அப்பகுதியில் இருந்த மக்களை போலீசார் அப்புறப்படுத்தினர். இதன்பின் மிகக்கவனமாக 9 இரும்பு வெடிகுண்டுகளையும் அவர்கள் செயலிழக்க செய்தனர். இதனையடுத்து அந்த மாவட்டத்தின் அருகிலுள்ள பகுதிகளில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கேரளாவில் மக்களவை தேர்தலுக்கு இன்னும் 2 இரண்டு நாட்களே உள்ள நிலையில் இந்த சம்பவம் மக்கள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்