< Back
தேசிய செய்திகள்
சிக்கமகளூருவில் கன்னட அமைப்பினர் போராட்டம்
தேசிய செய்திகள்

சிக்கமகளூருவில் கன்னட அமைப்பினர் போராட்டம்

தினத்தந்தி
|
11 Oct 2023 12:15 AM IST

தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதை கண்டித்து சிக்கமகளூருவில் கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

சிக்கமகளூரு-

தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதை கண்டித்து சிக்கமகளூருவில் கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

காவிரி பிரச்சினை

கர்நாடகம்- தமிழகம் இடையே காவிரி நீர் பங்கீடு தொடர்பான பிரச்சினை பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. இந்தநிலையில் தற்போது காவிரி பிரச்சினை மாநிலம் முழுவதும் கிளம்பி உள்ளது. அதாவது காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவின்படி தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் மாநிலம் முழுவதும் கன்னட அமைப்பினர், விவசாயிகள் கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதை கண்டித்து தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

குறிப்பாக மண்டியா, மைசூரு ஆகிய மாவட்டங்களில் கன்னட அமைப்பினர், விவசாயிகள் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது. இந்தநிலையில் நேற்று சிக்கமகளூரு ஆசாத் பூங்காவில் கன்னட அமைப்பினர் தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதை கண்டித்து போராட்டம் நடத்தினர்.

போராட்டம்

அப்போது போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கூறுகையில், காவிரியில் தமிழகத்திற்கு வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடக்கோரி காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின், கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் ஆகிய 3 பேரும் உள் ஒப்பந்தம் போட்டுள்ளனர்.

அந்த ஒப்பந்த அடிப்படையில் தான் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. கர்நாடகத்தில் உள்ள அணைகளில் தண்ணீர் நிரம்பவில்லை. இப்படி இருக்கும் போது தமிழகத்திற்கு எப்படி தண்ணீர் கொடுக்க முடியும். இங்குள்ள அணைகளின் நீர்மட்டத்தை மத்திய அரசு ஆய்வு நடத்த வேண்டும். அதன்பின்னர் தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பது குறித்து அவர்களே முடிவு செய்யட்டும்.

தண்ணீர் இல்லை

இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை பொய்த்துபோனது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது. இதனை கருத்தில் கொண்டு கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதை உடனே நிறுத்த வேண்டும். அவ்வாறு நிறுத்தாவிட்டால் நூதன போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்