காவிரி விவகாரத்தில் கர்நாடக எம்.பி.க்கள் குரல் கொடுக்க வேண்டும் கன்னட அமைப்பினர் வலியுறுத்தல்
|காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் கர்நாடக எம்.பி.க்கள் குரல் கொடுக்க வேண்டும் என்று மண்டியா விவசாயிகள் மற்றும் கன்னட அமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.
மண்டியா-
காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் கர்நாடக எம்.பி.க்கள் குரல் கொடுக்க வேண்டும் என்று மண்டியா விவசாயிகள் மற்றும் கன்னட அமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.
காவிரி நீர் பங்கீடு விவகாரம்
கர்நாடகம்-தமிழகம் இடையே தென்மேற்கு பருவமழை பொய்த்துப்போகும் காலங்களில் காவிரி நீரை பங்கிட்டு கொள்வது தொடர்பாக இரு மாநிலங்கள் இடையே பிரச்சினை இருந்து வருகிறது. இந்தநிலையில் இவ்வாண்டு தென்மேற்கு பருவமழை பொய்த்து போனது. இதனால் கர்நாடக அணைகளில் நீர் இருப்பு குறைந்து காணப்படுகிறது. இந்தநிலையில் கர்நாடக அணைகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு காவிரியில் நீர் திறந்துவிடும்படி காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி 2 முறை தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. தற்போது மேலும் 15 நாட்களுக்கு வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடவேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இதற்கு கர்நாடக விவசாயிகள், கன்னட அமைப்பினர், பா.ஜனதா, ஜனதா தளம் (எஸ்) கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டம்
குறிப்பாக கே.ஆர்.எஸ் அணை அமைந்துள்ள மண்டியா மாவட்டத்தில் இந்த போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. இந்தநிலையில் நேற்று மண்டியா கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள பூங்காவில் விவசாயிகள் சங்கத்தை சேர்ந்தவர்கள் நேற்று 27-வது நாளாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இதில் பெண் விவசாயிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது அவர்கள் காலி குடத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாநில அரசுக்கு எதிராக கோஷமிட்ட அவர்கள், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட கூடாது என்று கூறினர். மேலும் இந்த காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு நிரந்தர தீர்வு காணவேண்டும் என்று கூறினர்.
இதேபோல மண்டியா நகரில் உள்ள சாமராஜேந்திர உடையார் சர்க்கிளில் கூடிய அகில கர்நாடக விஸ்வகர்மா மகாசபையை சேர்ந்தவர்கள் தலைவர் நஞ்சுண்டி தலைமையில் கண்ட ஊர்வலம் நடத்தினர். அப்போது தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடுவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் ரத்தத்தை கொடுப்போமே தவிர, கர்நாடக அணைகளில் இருந்து நீரை கொடுக்கமாட்டோம் என்று கோஷமிட்டனர். பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக சென்ற அவர்கள் விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி சென்று, தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.
எம்.பி.க்கள் வாய் திறக்கவேண்டும்
இதற்கு அடுத்தப்படியாக சர் எம்.விசுவேஸ்வரய்யா சர்க்கிளில் பெங்களூரு, மைசூரு, மண்டியாவை சேர்ந்த பல்வேறு கன்னட அமைப்பினர் ஒன்று கூடி சாலை மறியல் போராட்டம் நடத்தினர். மத்திய, மாநில அரசுகள் காவிரி நீரை பங்கிடும் விவகாரத்தில் தோல்வியடைந்துவிட்டனர். மக்கள் இதனை மன்னிக்கமாட்டார்கள்.உடனே சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக அரசு தனது தரமான விவாதத்தை முன் வைத்து நீதி கிடைக்க வழிவகை செய்யவேண்டும் என்று கோஷமிட்டனர்.
இதை தொடர்ந்து அதே பகுதியில் ஸ்படிகபுரி மடத்தின் தலைவர் நஞ்சவகுத்த சாமி தலைமையிலான கன்னட அமைப்பினர் கண்டன ஊர்வலம் நடத்தினர். அப்போது அவர்கள் கர்நாடகத்தை சேர்ந்த 28 எம்.பி.க்களுக்கு எதிராக முழக்கமிட்டனர். நாடாளுமன்றத்தில் உள்ளேயும், வெளியேயும் கர்நாடக எம்.பி.க்கள் குரல் கொடுப்பது இல்லை. பிரதமர் மோடியும் மவுனமாக இருந்து வருகிறார்.
கர்நாடகத்தின் உரிமையை மீட்க பிரதமர் குரல் கொடுக்கவேண்டும் என்று கூறினர்.
கன்னட அமைப்பினர் ஆதரவு
இதேபோல பா.ஜனதா மற்றும் ஜனதா தளம் (எஸ்) கட்சியினர் சார்பில் மண்டியா நகரம், கே.ஆர்.பேட்டை, மலவள்ளி, பாண்டவபுரா, மத்தூர் ஆகிய இடங்களில் போராட்டம் நடத்தப்பட்டது.
இந்தநிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறும் பந்த்திற்கும் ஆதரவு அளிப்பதாக கன்னட அமைப்பினர், விவசாயிகள் மற்றும் பா.ஜனதா, ஜனதா தளம் (எஸ்) கட்சியினர் கூறியுள்ளனர்.