< Back
தேசிய செய்திகள்
கே.ஆர்.எஸ். அணையை முற்றுகையிட முயன்ற கன்னட அமைப்பினர்
தேசிய செய்திகள்

கே.ஆர்.எஸ். அணையை முற்றுகையிட முயன்ற கன்னட அமைப்பினர்

தினத்தந்தி
|
27 Aug 2023 2:48 AM IST

மண்டியாவில் போராட்டம் நடத்திய கன்னட அமைப்பினர் கே.ஆர்.எஸ். அணையை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி சென்று கைது செய்தனர்.

மண்டியா:

மண்டியாவில் போராட்டம் நடத்திய கன்னட அமைப்பினர் கே.ஆர்.எஸ். அணையை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி சென்று கைது செய்தனர்.

கபினி, கே.ஆர்.எஸ். அணை

கர்நாடகத்தில் கடந்த ஜூன் மாதங்களில் தென்மேற்கு பருவமழை பொய்த்து போனது. இதனால் கர்நாடகத்தில் உள்ள கே.ஆர்.எஸ். (கிருஷ்ணராஜசாகர்), ஹாரங்கி உள்பட பல அணைகள் நிரம்பவில்லை. மைசூரு எச்.டி.கோட்டை தாலுகா பீச்சனஹள்ளியில் உள்ள கபினி அணை மட்டும் நிரம்பியது. இந்தநிலையில் கர்நாடக அணைகளில் இருந்து 52 டி.எம்.சி (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கன அடி) தண்ணீர் தமிழகத்திற்கு வழங்கவேண்டும் என்று அந்த மாநில அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

இதையடுத்து கர்நாடகத்தில் உள்ள கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து தொடர்ந்து 6 நாட்கள் வினாடிக்கு 22 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதற்கு பா.ஜனதா, ஜனதா தளம் (எஸ்) கட்சியினர், கன்னட அமைப்பினர், விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மாநில அரசு தண்ணீர் திறந்துவிடுவதை படிப்படியாக குறைத்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து முற்றிலும் தண்ணீர் திறந்துவிடுவது நிறுத்தப்பட்டது.

கன்னட அமைப்பினர் போராட்டம்

இருப்பினும் தமிழகத்திற்கு எதிராக கன்னட அமைப்பினரின் போராட்டம் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது. இந்தநிலையில் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடியில் காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கே.ஆர்.ஆர். அணையை முற்றுகையிடும் போராட்டத்தில் கன்னட அமைப்பினர் ஈடுபட்டனர்.

இதற்காக பெங்களூருவில் இருந்து வந்த கன்னட அமைப்பினர் கே.ஆர்.எஸ். அணை நுழைவாயில் முன்பு போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட கூடாது. மேலும் தண்ணீர் திறந்துவிட்டால் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று கோஷமிட்டனர். இதையடுத்து அனைவரும் கே.எஸ்.ஆர். அணையை முற்றுகையிட முயற்சித்தனர்.

இதை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பார்த்து, அனைவரையும் தடுத்து நிறுத்தினர். இதனால் கன்னட அமைப்பினருக்கும், போலீசாருக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டத்தை கட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில் போலீசார், 50-க்கும் மேற்பட்டோரை கைது செய்து, குண்டுக்கட்டாக போலீஸ் வாகனத்தில் ஏற்றி சென்றனர். பின்னர் அவர்களை தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்துவிட்டு, மாலையில் அனைவரையும் விடுவித்தனர். இந்தநிலையில் கே.ஆர்.எஸ். அணைப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருவதால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்