< Back
தேசிய செய்திகள்
இமாச்சல பிரதேசத்தில் கனமழை: காங்கரா மாவட்டத்தில் உடைந்து விழுந்த ரெயில்வே பாலம்..!!

Image Courtacy: ANI

தேசிய செய்திகள்

இமாச்சல பிரதேசத்தில் கனமழை: காங்கரா மாவட்டத்தில் உடைந்து விழுந்த ரெயில்வே பாலம்..!!

தினத்தந்தி
|
20 Aug 2022 12:18 PM IST

இமாச்சல பிரதேசத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, காங்கரா மாவட்டத்தில் உள்ள ரெயில்வே பாலம் ஒன்று உடைந்து விழுந்தது.

காங்கரா,

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பருவமழை காரணமாக கனமழை வெள்ள பாதிப்பு ஏற்பட்ட வண்ணம் உள்ளது. இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் தற்போது கனமழை பாதிப்பு தீவிரமாக உள்ளது. குறிப்பாக அங்கு திடீரென மேகவெடிப்பு ஏற்பட்டு கனமழை வெள்ள பாதிப்பும், ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்படுகிறது.

இந்நிலையில் இமாச்சல பிரதேசத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, காங்கரா மாவட்டத்தில் உள்ள சக்கி ஆற்றின் மேல் கட்டப்பட்டிருந்த ரெயில்வே பாலம் ஒன்று உடைந்து விழுந்துள்ளதாகவும், ஆற்றில் வெள்ளப்பெருக்கு இன்னும் குறையவில்லை என்றும் வடக்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

இமாச்சல பிரதேசத்தில் கங்கரா, சம்பா, பிலாஸ்பூர், சிர்மூர், மண்டி ஆகிய மாவட்டங்களில் தற்போது கனமழை பெய்து வருகிறது. மண்டி மாவட்டத்தில் இன்று அதிகாலை திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வீடுகள் மற்றும் கடைகளுக்குள் தண்ணீர் புகுந்தது, குடியிருப்பாளர்களை சிக்க வைத்தது. மேலும் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை சேதப்படுத்தியது.

மோசமான வானிலை காரணமாக ஆறுகள் மற்றும் ஓடைகளுக்கு அருகில் செல்வதை தவிர்க்குமாறு உள்ளூர் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இமாச்சலப் பிரதேசத்தில் ஆகஸ்ட் 25-ம் தேதி வரை கனமழை பெய்யும் என்பதால் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக பேரிடர் மேலாண்மைத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.




மேலும் செய்திகள்