< Back
தேசிய செய்திகள்
கங்கனா ரனாவத் தனது பேச்சில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் - அகாலி தளம் கட்சி தலைவர்
தேசிய செய்திகள்

'கங்கனா ரனாவத் தனது பேச்சில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்' - அகாலி தளம் கட்சி தலைவர்

தினத்தந்தி
|
9 Jun 2024 8:35 AM IST

கங்கனா ரனாவத் தனது பேச்சில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என சுக்பீர் சிங் பாதல் தெரிவித்துள்ளார்.

சண்டிகர்,

பிரபல நடிகையும், இமாச்சல பிரதேசம் மண்டி நாடாளுமன்ற தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவருமான கங்கனா ரனாவத்தை சண்டிகார் விமான நிலையத்தில் மத்திய தொழிலக பாதுகாப்பு படை(சி.ஐ.எஸ்.அப்.) பெண் போலீஸ் குல்வீந்தர் கவுர், கன்னத்தில் அறைந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. பஞ்சாப் மாநிலத்தில் நடந்த விவசாய போராட்டம் குறித்து தவறாக பேசியதால் கங்கனாவை தாக்கியதாக குல்வீந்தர் கவுர் கூறினார். இதனிடையே குல்வீந்தர் கவுர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே குல்வீந்தர் கவுருக்கு பஞ்சாப் மாநில விவசாயிகள் சங்கத்தினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், கங்கனா ரனாவத் தனது பேச்சில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என சிரோமணி அகாலி தளம் கட்சியின் தலைவர் சுக்பீர் சிங் பாதல் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது;-

"விவசாயிகளின் போராட்டத்தில் பங்கேற்பதற்காக பஞ்சாப் பெண்கள் 100 ரூபாய் பெற்றுக்கொண்டார்கள் என்று கூறி ஒருவரின் தாயை நீங்கள் அவமதித்தால், அவரது பிள்ளைகளின் மனதை அது நிச்சயம் புண்படுத்தும். சி.ஐ.எஸ்.அப். பெண் அதிகாரி குல்வீந்தர் கவுரின் விஷயத்திலும் இதுதான் நடந்துள்ளது. அவரது தாய் விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளார். இதனால் உணர்ச்சிவசப்பட்டு அவர் இவ்வாறு செய்துள்ளார். கங்கனா ரனாவத் தனது பேச்சில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்."

இவ்வாறு அவர் தெரிவித்தார்.


மேலும் செய்திகள்