மத்திய அரசின் சூரிய மின்சக்தி திட்டத்தில் பலன் அடைந்த காஞ்சீபுரம் விவசாயி - பிரதமர் மோடி தகவல்
|மத்திய அரசின் சூரிய மின்சக்தி திட்டத்தில் பலன் அடைந்த காஞ்சீபுரம் விவசாயி குறித்து பிரதமர் மோடி மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசினார்.
புதுடெல்லி,
பிரதமர் மோடி நேற்று அகில இந்திய வானொலியில் 'மன்கிபாத்' என்னும் 'மனதின் குரல்' நிகழ்ச்சியில் பேசியபோது மத்திய அரசு அமல்படுத்தியுள்ள 'பிரதம மந்திரி குசும் யோஜனா' திட்டம் பற்றி எடுத்துரைத்தார். அப்போது அவர் இந்த திட்டத்தினால் காஞ்சீபுரத்தை சேர்ந்த கே.எழிலன் என்பவர் பலன்பெற்றிருப்பதாக தெரிவித்தார்.
இதுபற்றி மேலும் அவர் கூறும்போது, "தமிழ்நாட்டில், காஞ்சீபுரத்தில் கே.எழிலன் என்ற விவசாயி இருக்கிறார். அவர் பிரதம மந்திரி குசும் யோஜனா திட்டத்தின்கீழ் பலன் அடைந்துள்ளார். தனது வயலில் அவர் 10 குதிரை சக்தி திறன் கொண்ட சூரிய சக்தியால் இயங்குகிற பம்பு செட்டைப் பொருத்தி உளளார். இதன் காரணமாக அவருக்கு செலவுகள் குறைந்துள்ளன. வருமானமும் அதிகரித்துள்ளது" என தெரிவித்தார்.
இதே போன்று ராஜஸ்தானில் பரத்பூரில் கமல்ஜி மீனா என்பவர் பலன் அடைந்துள்ளதாகவும், இவரும் தன் வயலில் சூரிய மின்சக்தியால் இயங்கும் பம்பு செட்டைப் பொருத்தி, செலவினைக் குறைத்து அதிக வருமானத்தை பெற்றிருப்பதாக பிரதமர் மோடி குறிப்பிட்டார். மேலும் இவர் சூரிய மின்சக்தி வாயிலாக பல சிறுதொழில்களை இணைத்துள்ளதாகவும் அவர் கோடிட்டுக்காட்டினார்.