கலபுரகி பஸ் விபத்து: பலியானவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் - தெலுங்கானா அரசு அறிவிப்பு
|கலபுரகி பஸ் விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தெலுங்கானா அரசு அறிவித்துள்ளது.
பெங்களூரு,
கலபுரகி மாவட்டம் கமலாபுராவில் நேற்று முன்தினம் தனியார் பஸ், சரக்கு வேன் மீது மோதியதுடன், சாலையோரம் பல்டி அடித்து கவிழ்ந்து தீப்பிடித்தது. இந்த தீ விபத்தில் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த சிறுவர்கள் உள்பட 7 பேர் உடல் கருகி உயிர் இழந்திருந்தனர்.
மேலும் 15-க்கும் மேற்பட்டோர் பலத்த தீக்காயம் அடைந்து கலபுரகி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீ விபத்தில் பலியான குடும்பங்களுக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையுடன் ஆலோசித்து நிவாரணம் வழங்கப்படும் என்று போக்குவரத்து துறை மந்திரி ஸ்ரீராமலு அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், கலபுரகியில் தனியார் பஸ் தீப்பிடித்து எரிந்ததில் பலியான குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும், படுகாயம் அடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என்றும் தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார்.