தொடர் மழையால் நீர்வரத்து அதிகரிப்பு: கபினி அணை நிரம்பியது
|நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் நீர்வரத்து அதிகரித்ததால் கபினி அணை முழுமையாக நிரம்பியது. கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் 110 அடியை எட்டியது.
மைசூரு:
கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக ெபய்து வருகிறது. இதனால் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளிலும் பலத்த மழை கொட்டுகிறது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான குடகு மற்றும் கேரள மாநிலம் வயநாடு பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருகிறது. இந்த தொடர் கனமழையால் முக்கிய அணைகளான ஹாரங்கி, ஹேமாவதி, கபினி, கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்.) ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதில் முக்கிய அணைகளான கே.ஆர்.எஸ்., கபினி அணைகளுக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்து வருகிறது. இதனால் இந்த இரு அணைகளின் நீர்மட்டமும் தொடர்ந்து உயர்ந்து வந்தது.
மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடி கிராமத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள கே.ஆர்.எஸ். அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான குடகில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது. தென்மேற்கு பருவமழை தாமதமாக தொடங்கியதால் 70 அடியாக இருந்த கே.ஆர்.எஸ். அணையில் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
124.80 அடி கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ். அணையில் நேற்றைய நிலவரப்படி 110 அடி தண்ணீர் இருந்தது. அணைக்கு வினாடிக்கு 37,577 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 3,071 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கே.ஆர்.எஸ். அணை 17 அடி நிரம்பி உள்ளது. கே.ஆர்.எஸ். அணை நிரம்ப இன்னும் 14.80 அடியே பாக்கி உள்ளது. கனமழை தொடர்ந்து பெய்தால் இன்னும் ஒரு வாரத்தில் அணை நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா பீச்சனஹள்ளி கிராமத்தில் கபிலா ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள கபினி அணை நேற்று தனது முழு கொள்ளளவையும் எட்டி நிரம்பியது. இதனை அணை என்ஜினீயர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி கொள்ளளவு கொண்ட கபினி அணையின் நேற்று காலை முழு கொள்ளளவை எட்டி நிரம்பியது. இதனால் கபினி அணை நிரம்பியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அணைக்கு வினாடிக்கு 22,451 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 21 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதன்காரணமாக கபிலா ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கபிலா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளனர். மேலும் நஞ்சன்கூடு நஞ்சுண்டேஸ்வரர் கோவில் 16 கால் மண்டபம் கபிலா ஆற்றில் மூழ்கி உள்ளது. கபிலா ஆற்றில் அபாய கட்டத்தை தாண்டி தண்ணீர் செல்வதால், கரையோரம் மக்கள் செல்லாமல் இருக்க நஞ்சுண்டேஸ்வர் கோவில் பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கபினி மற்றும் கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து வினாடிக்கு 24,071 கனஅடி தண்ணீர் தமிழகத்திற்கு காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது. அதாவது, கபினியில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் கபிலா ஆற்றிலும், கே.ஆர்.எஸ். அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் காவிரி ஆற்றிலும் பாய்ந்தோடி, டி.நரசிப்புரா அருகே திருமாகூடலு சங்கமாவில் ஒன்றாக சங்கமித்து அகண்ட காவிரியாக தமிழகம் நோக்கி செல்கிறது.
நேற்று முன்தினம் இரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு 25,069 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.