டெல்லி போராட்டத்தின்போது ஜோதிமணி எம்.பி. ஆடை கிழிப்பு - மத்திய அரசுக்கு ராகுல், பிரியங்கா கண்டனம்
|டெல்லி போராட்டத்தின்போது ஜோதிமணி எம்.பி. ஆடை கிழிக்கப்பட்ட சம்பவத்திற்கு ராகுல், பிரியங்கா ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
புதுடெல்லி,
காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு எதிராக நடந்து வரும் அமலாக்கத்துறை விசாரணை உள்ளிட்ட விவகாரங்களை முன்வைத்து காங்கிரஸ் எம்.பி.க்கள் நேற்று டெல்லியில் போராட்டம் நடத்தினர். அந்த போராட்டத்தில் தமிழக எம்.பி. ஜோதிமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அவர்களை போலீசார் கைது செய்தனர். அப்போது தனது ஆடை கிழிக்கப்பட்டதாக ஜோதிமணி எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக வீடியோ ஒன்றை தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டிருந்த அவர், ஒரு எம்.பி.யை இப்படித்தான் நடத்துவதா? என கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்த வீடியோவை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது பேஸ்புக் தளத்தில் இணைத்து மத்திய அரசை சாடியுள்ளார். அவர் கூறுகையில், 'குடிமக்களின் துயரங்களை நாடாளுமன்றத்தில் எடுத்து வைக்கும் மக்கள் பிரதிநிதிகள் குற்றவாளிகள் போல நடத்தப்படுகின்றனர். உண்மையில் இதுதான் நாடாளுமன்றத்துக்கு எதிரானது' என குறிப்பிட்டு இருந்தார்.
இதைப்போல காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்காவும் ஜோதிமணியின் வீடியோவை தனது டுவிட்டர் தளத்தில் பகிர்ந்திருந்தார்.
அதில் அவர், 'கேள்வி கேட்டதற்காக பெண் எம்.பி.க்களின் உடைகளை கிழிப்பதும், சாலையில் இழுத்து செல்வதும் உச்சக்கட்ட கொடூரம். ஜனநாயக நாட்டில் பிரச்சினைகளுக்கு நீங்கள் செவிமடுக்க வேண்டும். ஆனால் நீங்கள் ஏன் கேள்விகளுக்கு பயப்படுகிறீர்கள்?' என பிரதமருக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.