கொல்கத்தா ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.எஸ்.சிவஞானம் நியமனம் - ஜனாதிபதி உத்தரவு
|கொல்கத்தா ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.எஸ்.சிவஞானம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
புதுடெல்லி,
தமிழகத்தை சேர்ந்த நீதிபதி டி.எஸ்.சிவஞானத்தை கொல்கத்தா ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 1963-ம் ஆண்டு பிறந்த டி.எஸ்.சிவஞானம் சென்னை சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்ற பின்னர் 1986-ம் ஆண்டு வக்கீலாக பணியை தொடங்கினார். 2000-ம் ஆண்டில் மத்திய அரசின் வக்கீலாக இருந்த அவர் 2009-ம் ஆண்டு மார்ச் மாதம் சென்னை ஐகோர்ட்டு கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
2011-ம் ஆண்டு மார்ச் மாதம் சென்னை ஐகோர்ட்டு நிரந்தர நீதிபதியாக இருந்த சிவஞானம் 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் கொல்கத்தா ஐகோர்ட்டு நீதிபதியாக பதவியேற்றார்.
இந்நிலையில், கொல்கத்தா ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக உள்ள பிரகாஷ் ஸ்ரீவத்சவா நேற்றுடன் ஓய்வு பெற்றார். இதையடுத்து மூத்த நீதிபதியாக உள்ள சிவஞானத்தை அடுத்த தலைமை நீதிபதியாக நியமிக்க சுப்ரீம் கோர்ட்டு கொலிஜியம் பரிந்துரைத்தது. இதை ஏற்று கொல்கத்தா ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதியாக சிவஞானத்தை ஜனாதிபதி நியமித்தார்.