டெல்லி அரசுக்கே அதிகாரம் என தீர்ப்பு: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மறுஆய்வு மனு
|டெல்லி அரசுக்கே அதிகாரம் என அளிக்கப்பட்ட தீர்ப்பினை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மறுஆய்வு மனு தாக்கல் செய்துள்ளது.
புதுடெல்லி,
டெல்லியில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகளை நியமிக்கவும், இட மாற்றம் செய்யவும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லி அரசுக்கே அதிகாரம் உள்ளது என சுப்ரீம் கோர்ட்டு கடந்த 11-ந் தேதி தீர்ப்பு அளித்தது.
அந்தத் தீர்ப்பில், "மக்களாட்சியில் உண்மையான நிர்வாக அதிகாரம் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திடம் இருக்க வேண்டும். பொது ஒழுங்கு, போலீஸ், நிலம் ஆகிய பணிகளை தவிர்த்து மீதமுள்ள துறைகள் மீதான சட்டம் இயற்றும் அதிகாரமும், நிர்வாகப் பணிகள் மீதான அதிகாரமும் டெல்லி அரசுக்கு உள்ளது" என கூறப்பட்டுள்ளது.
தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையில் 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு வழங்கிய இந்தத் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி மத்திய அரசின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே டெல்லியில் பணியாற்றும் அதிகாரிகளின் நியமனம். பணியிட மாற்றம் தொடர்பாக தேசிய தலைநகர் குடிமைப் பணிகள் ஆணையத்தை அமைக்கும் அவசர சட்டத்தை மத்திய அரசு நேற்று முன்தினம் கொண்டு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.