< Back
தேசிய செய்திகள்
ஜே.பி.நட்டா, அமித்ஷா லஞ்ச சங்கல்பயாத்திரைக்காக வருகிறார்கள்
தேசிய செய்திகள்

ஜே.பி.நட்டா, அமித்ஷா 'லஞ்ச சங்கல்ப'யாத்திரைக்காக வருகிறார்கள்

தினத்தந்தி
|
4 March 2023 10:15 AM IST

ஜே.பி.நட்டா, அமித்ஷா 'லஞ்ச சங்கல்ப' யாத்திரைக்காக கர்நாடகம் வருகிறார்கள் என்று முன்னாள் மந்திரி பிரியங்க் கார்கே விமர்சனம் செய்துள்ளார்.

பெங்களூரு-

கர்நாடக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மந்திரி பிரியங்க் கார்கே பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

ஊழலில் மிதக்கிறார்கள்

கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சியில் விதான சவுதா வியாபார சவுதாவாக மாறிவிட்டதாக நாங்கள் அடிக்கடி சொல்கிறோம். இதற்கு ஆதாரங்கள் இல்லை என்று பா.ஜனதா கூறி வருகிறது. நாட்டிேயே ஊழல் மிகுந்த அரசு கர்நாடக பா.ஜனதா அரசு தான் என்று மக்களே பேசிக்கொள்கிறார்கள். இது தற்போது லோக்அயுக்தா போலீசார் நடத்திய சோதனையில் பா.ஜனதா எம்.எல்.ஏ.வின் மகன் சிக்கியது மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

உள்துறை மந்திரி அமித்ஷா பேசும்போது, பிரதமர் மோடியின் முகத்தை பார்த்து ஓட்டு போடுங்கள், நாங்கள் ஊழலற்ற ஆட்சி நிர்வாகத்தை நடத்துகிறோம் என்று கூறினார். பா.ஜனதா ஆட்சியில் உள்ள முதல்-மந்திரி மற்றும் மந்திரிகள், அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஊழலில் மிதக்கிறார்கள் என்பது பிரதமர் மோடிக்கும், அமித்ஷாவுக்கும் தெரிந்துள்ளது. அதனால் மோடியின் முகத்தை பார்த்து ஓட்டு போடுங்கள் என்று அமித்ஷா கேட்கிறார்.

30 சதவீத கமிஷன்

நாங்கள் ஆதாரப்பூர்வமாக ஊழலை வெளிப்படுத்தினாலும், அதற்கு ஆதாரம் எங்கே என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மற்றும் மந்திரிகள் கேட்கிறார்கள். மடாதிபதி ஒருவரே மடங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை விடுவிக்க 30 சதவீத கமிஷன் கொடுக்க வேண்டும் என்று சொன்னார். இதுகுறித்து பசவராஜ் பொம்மை எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார்.

ஒப்பந்ததாரர் சந்தோஷ் பட்டீல், மந்திரியாக இருந்த ஈசுவரப்பாவின் பெயரை எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைவிட வேறு ஆதாரங்கள் வேண்டுமா?. பா.ஜனதா எம்.எல்.ஏ. கூளிஹட்டி சேகர், நீர்ப்பாசனத்துறையில் ரூ.22 ஆயிரம் கோடி திட்டத்தில் ஊழல் நடந்துள்ளதாக கடிதம் எழுதினார். ஊழலுக்கு இது ஆதாரம் இல்லையா?.

கச்சா பொருட்கள்

மந்திரிகள் 40 சதவீத கமிஷன் கேட்பதாக கர்நாடக அரசு ஒப்பந்ததாரர்கள் சங்க தலைவர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். இதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. விஜய சங்கல்ப யாத்திரைக்காக பா.ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோர் வரவில்லை. லஞ்ச சங்கல்ப யாத்திரை, ஊழலோத்சவா யாத்திரைக்காக அவர்கள் வருகிறார்கள்.

பா.ஜனதாவை சேர்ந்த மாடால் விருபாக்ஷப்பா எம்.எல்.ஏ.வின் மகன் லஞ்சம் வாங்கும்போது லோக்அயுக்தாவிடம் சிக்கியுள்ளார். அவரது வீடு, அலுவலகத்தில் ரூ.8 கோடி சிக்கியுள்ளது. மைசூரு சாண்டல் சோப்பு தொழிற்சாலை வாரிய தலைவராக இருந்த மாடாள் விருபாக்ஷப்பா அதிகளவில் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளார். சோப்புக்கு தேவையான கச்சா பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்கி ஊழல் செய்துள்ளார். இவ்வாறு பிரியங்க் கார்கே கூறினார்.


மேலும் செய்திகள்