நாடாளுமன்ற தேர்தல் முடியும் வரை பா.ஜனதா தலைவராக ஜே.பி.நட்டா நீடிப்பார் - புதிய தகவல்கள்
|2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் முடியும் வரை பா.ஜனதா தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு பதவி நீட்டிப்பு அளிக்கப்படும் என்று தெரிகிறது.
புதுடெல்லி,
பா.ஜனதாவின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் 3 ஆண்டு பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முடிவடைகிறது.
இருப்பினும், அவருக்கு பதவி நீட்டிப்பு அளிக்கப்படும் என்று தெரிகிறது. ஏனென்றால், 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வருகிறது. அதற்கு முன்பு, சில முக்கியமான மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் நடக்க உள்ளன.
கட்சியில் அதே நிர்வாகம் நீடிப்பது மேற்கண்ட தேர்தல்களுக்கு உதவும் என்று கட்சி மேலிடம் கருதுகிறது. எனவே, 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் முடியும் வரை ஜே.பி.நட்டாவுக்கு பதவி நீட்டிப்பு அளிக்கப்படக்கூடும் என்று பா.ஜனதா வட்டாரங்கள் தெரிவித்தன.
பா.ஜனதாவின் உயரிய அமைப்பான ஆட்சி மன்ற குழு, இதற்கு ஒப்புதல் அளிக்கும் என்று தெரிகிறது.
பொதுவாக, தேசிய தலைவர் தேர்தல் நடப்பதற்கு முன்பு, பாதி மாநிலங்களிலாவது மாநில பா.ஜனதாவின் உட்கட்சி தேர்தல்கள் நடத்தப்படுவது வழக்கம். ஆனால், தற்போது வரை மாநில பா.ஜனதாவில் உட்கட்சி தேர்தல்கள் தொடங்கப்படவில்லை. ஜே.பி.நட்டா நீடிப்பார் என்பதற்கான அறிகுறியாக இதை சுட்டிக்காட்டுகிறார்கள்.
நட்டாவுக்கு முன்பு தலைவராக இருந்த அமித்ஷாவுக்கும் 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் முடியும் வரை பதவி நீட்டிப்பு அளிக்கப்பட்டது. அதன்பிறகுதான் உட்கட்சி தேர்தல் நடத்தப்பட்டு, நட்டா தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இமாசலபிரதேசத்தை சேர்ந்த நட்டாவின் வயது 61. அவர் பிரதமர் மோடியின் நம்பிக்கையை பெற்றவர். ஆர்.எஸ்.எஸ். தலைமைக்கு நெருக்கமானவர். அமித்ஷா உருவாக்கிய உத்வேகத்தையும், சுறுசுறுப்பையும் அவர் முன்னெடுத்து செல்வதாக கருதப்படுகிறார். அவர் தலைவரான பிறகு உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் பா.ஜனதா ஆட்சியை தக்க வைத்துக்கொண்டது.
பீகாரில் கூட்டணியாக வெற்றி பெற்றது. தெலுங்கானாவில் பலமான சக்தியாக உருவெடுத்தது. மேற்கு வங்காளம் மட்டுமே பின்னடைவாக அமைந்தது.