உத்தரகாண்டில் புதையும் நகரம்: மக்களை பாதுகாப்பாக வெளியேற்ற நடவடிக்கை; முதல்-மந்திரியுடன் பிரதமர் மோடி பேச்சு
|புதையும் ஜோஷிமத் நகரம், நிலச்சரிவு அழிவு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதையொட்டி உத்தரகாண்ட் முதல்-மந்திரியுடன் பிரதமர் மோடி தொலைபேசி வழியாக பேசினார்.
மக்கள் வெளியேற்றம்
இயற்கை எழில் கொஞ்சும் உத்தரகாண்ட் மாநிலத்தில் இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள சிறிய நகரமான ஜோஷிமத், பூலோக சொர்க்கம் என அழைக்கப்படுகிறது. இந்த சிறப்பு வாய்ந்த நகரத்துக்கு பெரும் சோதனை வந்திருக்கிறது. இந்த நகரம், நில வெடிப்புகளாலும், நிலச்சரிவுகளாலும் பாதிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள 4,500 கட்டிடங்களில் 610 கட்டிடங்களில் விரிசல்கள் ஏற்பட்டு, அவை வாழத்தகுதியற்றவையாக மாறி இருக்கின்றன. அந்த கட்டிடங்களில் வாழ்கிறவர்களை உடனடியாக வெளியேற்றுமாறு முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமி உத்தரவிட்டுள்ளார்.
சங்கராச்சாரியர் மடத்திலும் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. இந்த நகரம் புதைந்துகொண்டிருப்பது மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதன் காரணமாக 60-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வெளியேற்றப்பட்டுள்ளன. இன்னும் குறைந்தது 90 குடும்பங்கள் வெளியேற்றப்பட இருக்கின்றன. 4 அல்லது 5 இடங்களில் நிவாரண மையங்களை உள்ளூர் நிர்வாகம் ஏற்படுத்தி இருக்கிறது.
கலெக்டர் ஆய்வு
சமோலி மாவட்ட கலெக்டர் ஹிமான்சு குரானா அங்கு முகாமிட்டு, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வீடு, வீடாகச் சென்று ஆய்வு நடத்தினார். விரிசலான வீடுகளில் வாழ்கிறவர்கள், நிவாரண மையங்களில் தஞ்சம் அடையுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுபற்றி செய்தி நிறுவனம் ஒன்றிடம் கலெக்டர் ஹிமான்சு குரானா பேசும்போது, "ஜோஷிமத், நிலச்சரிவு அழிவு மண்டலமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. புதையும் நகரத்தில் வசிக்க முடியாத வீடுகளில் வசித்து வந்த 60-க்கும் மேற்பட்ட குடும்பங்கள், தற்காலிக நிவாரண மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டுள்ள கட்டிடங்களை கணக்கெடுக்கும் பணி நடக்கிறது. இந்த கட்டிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் " என தெரிவித்தார்.
"ஜோஷிமத்தில் நிலம் புதைவது என்பது கொஞ்சகாலமாக மெல்ல மெல்ல நடந்திருக்கிறது. கடந்த ஒரு வாரத்தில் இது அதிகரித்துள்ளது. வீடுகள், வயல்கள், சாலைகள் எங்கும் விரிசல்கள் அதிகரித்துள்ளன. பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கு முக்கியத்துவம் அளிக்கிறோம்"எனவும் அவர் குறிப்பிட்டார்.
முதல்-மந்திரி பார்வையிட்டார்
ஜோஷிமத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமி நேரில் பார்வையிட்டார்.
இதற்கிடையே ஜோஷிமத்தை ஹைதராபாத் தேசிய ரிமோட் சென்சிங் சென்டர் மற்றும் டேராடூனில் உள்ள இந்திய ரிமோட் சென்சிங் நிறுவனம் செயற்கைக்கோள் படங்கள் மூலம் ஆய்வு செய்து, விரிவான அறிக்கையை புகைப்படங்களுடன் சமர்ப்பிக்குமாறு உத்தரகாண்ட் மாநில அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
இதே போன்று ஐ.ஐ.டி. ரூர்கே, வாடியா இமாலயா புவியியல் நிறுவனம், தேசிய நீரியல் நிறுவனம் ரூர்கே, சி.எஸ்.ஐ.ஆர். அமைப்பின் இயக்குனர், மத்திய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் ரூர்கே போன்றவை ஆய்வுகள் நடத்தி உள்ளன. அவை விரைவில் அரசிடம் அறிக்கை அளிக்கும்.
ஐகோர்ட்டில் வழக்கு
ஜோஷிமத் புதைவது தொடர்பான விவகாரம், டெல்லி ஐகோர்ட்டுக்கு சென்றுள்ளது. அந்த நகரத்தை ஆய்வு செய்வதற்கு ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிடுமாறு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் ஜோஷிமத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 570 வீடுகளில் பெரிய அளவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் அலுவலகத்தில் கூட்டம்
இந்த நிலையில், ஜோஷிமத் விவகாரம் தொடர்பாக டெல்லியில் பிரதமர் அலுவலகத்தில் உயர் மட்ட ஆலோசனைக்கூட்டம் நேற்று நடந்தது.
இதில் பிரதமரின் முதன்மைச் செயலாளர் பி.கே.மிஷ்ரா, மத்திய மந்திரிசபை செயலாளர் ராஜீவ் கவுபா, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஜோஷிமத் மாவட்ட அதிகாரிகளும் காணொலிக்காட்சி வழியாக பங்கேற்றனர். உத்தரகாண்ட் அரசின் மூத்த அதிகாரிகளும் கலந்து கொள்ளத்தவறவில்லை.
இந்த கூட்டத்தில் ஜோஷிமத்தில் உடனடியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றி விவாதிக்கப்பட்டதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
முதல்-மந்திரியுடன் பிரதமர் பேச்சு
உத்தரகாண்ட் மாநில முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமியை பிரதமர் மோடி நேற்று தொலைபேசி வழியாக தொடர்பு கொண்டு பேசினார். பாதிக்கப்பட்ட மக்களின் பாதுகாப்பு, அவர்களை மறுகுடியமர்வு செய்வதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அவர் விசாரித்து அறிந்தார்.
இதுகுறித்து முதல்-மந்திரி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜோஷிமத் நிலைமையை பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் கண்காணித்து வருவதாகவும், மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்கு எடுக்கப்படுகிற நடவடிக்கைகள் குறித்தும் அவர் கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைமைச்செயலாளர் ஆய்வு
நிலச்சரிவால் புதையும் ஜோஷிமத் நகரத்துக்கு மாநில அரசின் தலைமைச் செயலாளர் சுக்பீர் சிங் சந்து, நேற்று சென்றார். அவருடன் போலீஸ் டி.ஜி.பி. அசோக் குமார், முதல்-மந்திரியின் செயலாளர் ஆர்.மீனாட்சி சுந்தரம் ஆகியோரும் சென்றிருந்தனர்.
இந்தக் குழுவினர் நிலச்சரிவால் பெரிதும் பாதிக்கப்பட்ட பகுதிகளான மனோகர் பாக், சிங்தார், மர்வாரி பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பாதிக்கப்பட்ட மக்கள் தற்காலிக நிவாரண மையங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தினர்.