கார்கே, ராகுல் காந்தி முன்னிலையில் சந்திரசேகர் ராவ் கட்சி நிர்வாகிகள் 35 பேர் காங்கிரசில் இணைந்தனர்
|முன்னாள் எம்.பி., முன்னாள் மந்திரி உள்ளிட்ட தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர் ராவ் கட்சி நிர்வாகிகள் 35 பேர் காங்கிரசில் இணைந்தனர்.
புதுடெல்லி,
தெலுங்கானா முதல்-மந்திரி கே.சந்திரசேகர் ராவ் தெலுங்கானா ராஷ்டிர சமிதி என்ற பெயரில் தொடங்கிய கட்சி, பின்னர் பாரத ராஷ்டிர சமிதி என பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாரத ராஷ்டிர சமிதி நிர்வாகிகள் 35 பேர் நேற்று டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை சந்தித்தனர். அப்போது காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், தெலுங்கானா மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி ஆகியோர் உடனிருந்தனர்.
காங்கிரசில் இணைந்தனர்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாரத ராஷ்டிர சமிதி நிர்வாகிகள் 35 பேரும், தாங்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும், தெலுங்கானா கம்மத்தில் அடுத்த மாதம் முதல் வாரத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பேசுவோம். அதில் அனேகமாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கலந்துகொள்வார் என்று தெரிவித்தனர்.
முன்னாள் எம்.பி., மந்திரி
காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த பாரத ராஷ்டிர சமிதி நிர்வாகிகளில் கம்மம் மக்களவை தொகுதி முன்னாள் எம்.பி. பொங்குலெட்டி ஸ்ரீனிவாஸ் ரெட்டியும், ஆந்திரா, தெலுங்கானா முன்னாள் மந்திரி ஜூபள்ளி கிருஷ்ணா ராவ், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோரும் அடங்குவர்.
தேர்தல் நடைபெறவுள்ள நிலையில்...
தெலுங்கானாவில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அந்த மாநிலத்தை சுமார் 10 ஆண்டுகளாக ஆண்டுவரும் சந்திரசேகர் ராவிடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரஸ் முனைப்பு காட்டி வருகிறது. இந்நிலையில் ஆளுங்கட்சியில் இருந்து 35 நிர்வாகிகள் காங்கிரசுக்கு இடம்பெயர்ந்திருப்பது அக்கட்சிக்கு ஒரு புத்துணர்வை அளித்திருக்கிறது.