ஜம்மு காஷ்மீரில் பா.ஜனதா பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கும் - ராஜ்நாத் சிங்
|பா,ஜனதா ஆட்சிக்கு வந்தால் ஜம்மு காஷ்மீர் நவீன மாநிலமாக உருவெடுக்கும் என்று மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கூறினார்.
ஜம்மு,
ஜம்மு-காஷ்மீரில் செப். 18,25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது; தொடர்ந்து, அக்டோபர் 8-ம் தேதியில் வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.
ராம்பன் தொகுதியில், தேசிய மாநாடு கட்சியின் அர்ஜுன் சிங் ராஜுவுக்கு எதிராக பாஜகவின் ராகேஷ் சிங் தாகூர் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பேசியதாவது:
2019 -ம் ஆண்டு முதல் ஜம்மு-காஷ்மீரில் ஏற்பட்ட பாதுகாப்பு சூழ்நிலைகளால், இளைஞர்கள் கைத்துப்பாக்கிகள், ரிவால்வர்களுக்கு பதிலாக மடிக்கணினிகள் மற்றும் கணினிகளை தங்கள் கைகளில் வைத்திருக்கிறார்கள். இப்போது, ஸ்ரீநகரில் மக்கள்மீது துப்பாக்கி சூடு நடத்த யாரும் துணிவதில்லை. இது தொடர்வதற்கும், ஜம்மு-காஷ்மீரில் நிலையான வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கும் பாஜகவைதான் நீங்கள் ஆதரிக்க வேண்டும்.
2014-ல் நரேந்திர மோடி பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு, மத்திய அரசின் செயல்திறன் குறித்து சொல்ல விரும்புகிறேன். அதாவது, பொருளாதாரத்தில் 11 ஆவது இடத்திலிருந்த இந்தியா வேகமாக முன்னேறியது. ஆகையால், ஓர் அரசு சுமூகமாக இயங்குவதற்கு பிரதமர், முதல்-மந்திரிகள் பதவிகளில் திறமையான, வலுவான துடிப்பு கொண்ட நபர்கள்தான் தேவை. 2019 ஆண்டுக்கு முன்பாக, காஷ்மீரில் பயங்கரவாத சூழல் நிலவியது; ஆனால், இன்று யாரும் கைத்துப்பாக்கியை எடுக்கவோ, துப்பாக்கி சூடு நடத்தவோ துணிவதில்லை. இது ஒரு வலுவான தலைவர் ஆட்சியில் இருப்பதன் விளைவாகும்.
தேர்தலில் பாஜக பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கும் என உறுதியாக நம்புகிறேன். பாஜக ஆட்சிக்கு வந்தால், ஜம்மு-காஷ்மீர் நாட்டின் நம்பர் ஒன் மாநிலமாகவும், நவீன மாநிலமாக உருவெடுக்கும்
இவ்வாறு அவர் கூறினார்.