குஜராத்: ஆம்ஆத்மி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.எல்.ஏ பாஜகவில் இணைகிறார்?
|குஜராத்தில் ஆம்ஆத்மி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.எல்.ஏ. பூபத் பயானி, பா.ஜ.க.வில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆமதாபாத்,
182 தொகுதிகளை கொண்ட குஜராத் சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 8-ம் தேதி எண்ணப்பட்டன.
இத்தேர்தலில் 156 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது.காங்கிரஸ் 17 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றது. ஆம் ஆத்மி 5 தொகுதிகளிலும் வெற்றிபெற்றது.
இந்த வெற்றியின் மூலம் தொடர்ந்து 7-வது முறையாக குஜராத்தில் பாஜக ஆட்சியை தக்கவைத்துள்ளது. தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து நாளை முதல்- மந்திரியாக பூபேந்திர பட்டேல் மீண்டும் பதவியேற்கிறார்.
இந்த நிலையில், விஸ்வதர் தொகுதியில் இருந்து வெற்றி பெற்ற ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. பூபத் பயானி பா.ஜ.க.வில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக அவர் கூறுகையில், நான் பாஜ.க.வில் இணையவில்லை. நான் பாஜகவில் இணைய வேண்டுமா? இல்லையா என்று மக்களிடம் கேட்பேன். மக்களின் விருப்பம் குறித்து கருத்து கேட்ட பிறகே இணைவது குறித்து முடிவு செய்வேன். நான் பாஜகவில் முன்பு இருந்தேன், பாஜக தலைவர்களுடன் நல்ல மதிப்பு கொண்டு உள்ளேன்.
எனது தொகுதி விவசாயிகள் அதிகம் உள்ள பகுதியில் உள்ளது. அவர்களின் பாசனம் தொடர்பான பிரச்சனைகளை நான் தீர்க்க வேண்டும். தொகுதியில் வியாபாரிகள் அதிகம் உள்ளனர். அவர்கள் பிரச்சினைகளை நான் கவனிக்க வேண்டும்.
அரசாங்கத்துடன் எனக்கு நல்ல தொடர்பு இல்லையென்றால் என்னால் அதை செய்ய முடியாது. மற்ற ஆம் ஆத்மி எம்எல்ஏ.க்களுடன் நான் தொடர்பில் இல்லை. பா.ஜ.க.வில் இணையாமல், பாஜக அரசிற்கு வெளியில் இருந்து ஆதரவு அளிக்க உள்ளதாக அவர் தெரிவித்தார்.