ஜார்கண்ட் கவர்னரை சந்திக்க நேரம் கேட்ட ஜே.எம்.எம். தலைமையிலான கூட்டணி
|பெரும்பான்மையை நிரூபிக்க இன்று மாலை ஜார்கண்ட் கவர்னரிடம் நேரம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ராஞ்சி,
ஜார்க்கண்டில் மாநில போக்குவரத்துத்துறை அமைச்சராக இருக்கும் சம்பாய் சோரன் அந்த மாநிலத்தின் புதிய முதல்-மந்திரியாக பதவியேற்க இருக்கிறார். அதை உறுதிசெய்யும் வகையில் அவர் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் சட்டமன்றக் கட்சித் தலைவராக நேற்று அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில் ஜார்க்கண்டில் ஜே.எம்.எம் தலைமையிலான கூட்டணி இன்று பிற்பகல் அம்மாநில கவர்னரை சந்திக்க நேரம் கேட்டதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராஜேஷ் தாக்கூர் தெரிவித்தார்.
இதுதொடர்பாக செய்தியாளரிடம் பேசிய அவர், "கூட்டணியை வழிநடத்தும் ஜே.எம்.எம். சட்டமன்ற கட்சித் தலைவர் சம்பாய் சோரன், பெரும்பான்மையை நிரூபிக்க இன்று மாலை கவர்னரிடம் நேரம் கேட்டுள்ளார். இங்குள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் கவர்னரின் அழைப்பிற்காக காத்திருக்கின்றனர்
தாமதத்திற்கான காரணங்கள் எங்களுக்குத் தெரியவில்லை... கூட்டணிக்கு ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க கவர்னர் தாமதம் செய்தால், எதிர்க்கட்சியான பா.ஜனதாவின் எந்த முயற்சியையும் முறியடிக்கும் வகையில், சட்டமியற்றுபவர்கள் ஐதராபாத் செல்வார்கள்" என்று ராஜேஷ் தாக்கூர் கூறினார்.