காஷ்மீரில் ஏராளமான ஆயுதங்கள், வெடிபொருட்கள் சிக்கியது
|காஷ்மீரில் ஏராளமான ஆயுதங்கள், வெடிபொருட்களை பாதுகாப்பு படையினர் கைப்பற்றினர்.
ஸ்ரீநகர்,
காஷ்மீர் பாரமுல்லா மாவட்டத்தின் ஊரி பகுதியில் பாகிஸ்தான் பகுதியில் இருந்து பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சி நடப்பதாகவும், ஏராளமான ஆயுதங்களை குவிக்க முயல்வதாகவும் பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதையடுத்து எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் பல திடீர் தாக்குதல்களையும், தேடுதல் நடவடிக்கைகளையும் பாதுகாப்பு படையினர் மேற்கொண்டனர்.
இந்நிலையில் ஊரி ஹத்லங்கா பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை ராணுவத்தினர் தேடுதலில் ஈடுபட்டனர்.
அப்போது, மறைத்து வைக்கப்பட்டிருந்த ஏராளமான ஆயுதங்கள், வெடிபொருட்களை கண்டுபிடித்து கைப்பற்றினர்.
அவற்றில், 8 ஏ.கே.74 துப்பாக்கிகள், 24 ஏ.கே.74 துப்பாக்கி தோட்டா கொள்கலன்கள், 560 ஏ.கே.74 தோட்டாக்கள், 12 சீன கைத்துப்பாக்கிகள், 24 சீன கைத்துப்பாக்கி தோட்டா கொள்கலன்கள், 244 கைத்துப்பாக்கி தோட்டாக்கள், 9 சீன கையெறிகுண்டுகள், 5 பாகிஸ்தான் கையெறிகுண்டுகள், 'ஐ லவ் பாகிஸ்தான்' என்று பொறிக்கப்பட்ட 81 பலூன்கள், பாகிஸ்தான் பெயருடன் 5 செயற்கை இழை சாக்குப்பைகள் ஆகியவை அடங்கும் என ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
'காஷ்மீர் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகளின் எண்ணிக்கையும், அவர்களின் ஆயுத, வெடிபொருட்கள் இருப்பும் வெகுவாக குறைந்துள்ளன. எனவே இந்தியப் பகுதிக்குள் ஊடுருவவும், ஆயுதங்களை கடத்தவும் பயங்கரவாதிகள் தீவிரமாக உள்ளனர்.
ஆனால் பாதுகாப்பு படையினரின் தீவிர கண்காணிப்பு காரணமாக அவர்கள் ஆயுதங்களை கைவிட்டு தங்கள் பகுதிக்கு திரும்பியிருக்கலாம்' என்று அவர் கூறினார்.
போதைப்பொருட்கள்
பாரமுல்லா மாவட்டத்தின் ஊரி பகுதியில் ஏற்கனவே இந்த ஆண்டு நடத்தப்பட்ட 8 தேடுதல் நடவடிக்கைகளில் பெருமளவிலான ஆயுதங்கள், வெடிமருந்துகளுடன், போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.