குழந்தைகள் திருமணம் ஜார்கண்ட் முதலிடம் - மத்திய உள்துறை அமைச்சகம்
|ஜார்க்கண்ட் மாநிலத்தில்தான் அதிகளவில் குழந்தைகள் திருமணங்கள் நடப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில், கடந்த 2020-ம் ஆண்டு மாதிரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. 84 லட்சம் பேரிடம் சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் சில புள்ளி விவரங்கள் தயாரிக்கப்பட்டன. இந்த அறிக்கை ஒரு வாரத்துக்கு முன்பு வெளியானது.
இந்த அறிக்கையின்படி நாட்டில் குழந்தை திருமணங்கள் அதிகம் நடப்பது ஜார்கண்ட் மாநிலத்தில் என்பது தெரியவந்துள்ளது. அங்கு குழந்தை திருமணங்களின் வீதம் 5.8 சதவீதமாக உள்ளது. இதில் கிராமப்புறத்தில் நடைபெறும் திருமணங்கள் 7.3 சதவீதமாகவும், நகர்ப்புறங்களில் நடைபெறும் திருமணங்கள் 3 சதவீதமாகவும் உள்ளன. தேசிய அளவில் குழந்தை திருமணங்களின் வீதம் 1.9 சதவீதம் ஆகும்.
நாட்டில், கேரளாவில் குழந்தை திருமணங்கள் எதுவும் பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதைப்போல 21 வயதுக்கு முன்பு திருமணம் செய்வது ஜார்கண்டிலும், மேற்கு வங்காளத்திலும் அதிகமாக உள்ளது. ஜார்கண்டில் 54.6 சதவீதமாகவும், மேற்கு வங்காளத்தில் 54.9 சதவீதமாகவும் இது பதிவாகியுள்ளது.
இதற்கிடையே, தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கையின்படி 2015-ம் ஆண்டில் 32 பேரும், 2016-ல் 27 பேரும், 2017-ல் 19 பேரும், 2018-ல் 18 பேரும், 2019 மற்றும் 2020-ல் தலா 15 பேரும் ஜார்கண்ட் மாநிலத்தில் மாந்திரீகத்தின் பேரில் கொல்லப்பட்டு இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.