10 ரூபாய் கேட்ட 12 வயது மகனை கொன்ற கொடூர தந்தை - ஜார்கண்டில் அதிர்ச்சி சம்பவம்
|ஜார்கண்டில் 10 ரூபாய் கேட்ட 12 வயது மகனை, தந்தை கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சத்ரா,
ஜார்கண்ட் மாநிலம் சத்ரா மாவட்டத்தில் 48 வயது நபர் ஒருவர், 10 ரூபாய் கேட்டதற்காக தனது 12 வயது மகனை கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஞ்சியில் இருந்து 200 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பாஷிஷ்ட்நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கரைலிபார் கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
பப்பு குமார் என்ற சிறுவனின் பெற்றோர் காலை 9 மணியளவிலேயே குடிபோதையில் சண்டையிட்டுக் கொண்டிருந்துள்ளனர். இந்த நிலையில் சிறுவன் அவனது தந்தையிடம் 10 ரூபாய் கேட்டுள்ளான். ஆத்திரத்தில் அவனது தந்தை சிறுவனை கழுத்தை நெரித்து கொலை செய்தார்.
சிறுவனின் 15 வயது அக்கா செங்கல் சூளையில் வேலை செய்துவிட்டு வீடு திரும்பியபோது இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சிறுவனின் தந்தையை கைது செய்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சிறுவன் எதற்காக 10 ரூபாய் கேட்டான் என்பது தெரியவில்லை. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.