அவதூறு வழக்கில் ராகுல் காந்தி நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு - ஜார்கண்ட் ஐகோர்ட்டு உத்தரவு
|நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி ராகுல் காந்தி ஜார்கண்ட் ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார்.
ராஞ்சி,
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கடந்த 2019-ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின்போது மோடி பெயர் தொடர்பாக பேசிய உரை சர்ச்சையானது. இந்த உரை தொடர்பாக குஜராத் கோர்ட்டில் அவர் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
இதற்கிடையே மோடி பெயர் அவமதிப்பு தொடர்பாக ராகுல் காந்தி மீது ஜார்கண்டின் ராஞ்சியில் உள்ள சிறப்பு கோர்ட்டு ஒன்றில் பிரதீப் மோடி என்ற வக்கீல் ஒருவரும் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து தனக்கு விலக்கு அளிக்க வேண்டும் என ராகுல் காந்தி ஜார்கண்ட் ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சஞ்சய் குமார் திவிவேதி, ராகுல் காந்திக்கு விலக்கு அளித்து நேற்று உத்தரவிட்டார். அதேநேரம் இந்த வழக்கில் சாட்சிகளை விசாரிக்கும்போது அவர் ஆஜராகவில்லை என்றால் மீண்டும் அவர்களை விசாரிக்க முடியாது என்றும் எச்சரித்தார்.