ஜார்க்கண்ட்: ஹேமந்த் சோரன் தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி
|ஜார்க்கண்டில் ஹேமந்த் சோரன் தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளது.
ராஞ்சி,
ஜார்கண்ட் மாநிலத்தில், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் காங்கிரஸ் இணைந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. அங்கு முதல்-மந்திரியாக இருக்கும் ஹேமந்த் சோரன் தனது பதவியை தவறாக பயன்படுத்தி சுரங்க குத்தகை பெற்றுக்கொண்டது தெரியவந்துள்ளது.
இதைத்தொடர்ந்து அவரது எம்.எல்.ஏ. பதவியை தகுதிநீக்கம் செய்ய கவர்னருக்கு தேர்தல் கமிஷன் பரிந்துரைத்ததாக தெரிகிறது. ஆனால் இந்த விவகாரத்தில் கவர்னர் இதுவரை இறுதி முடிவு எடுக்கவில்லை. இதனால் மாநிலத்தில் பெரும் அரசியல் நெருக்கடி நீடித்து வருகிறது.
ஹேமந்த் சோரன் முதல்-மந்திரி பதவி பறிபோனால் ஆட்சியை தக்கவைக்க ஐக்கிய முற்போக்கு கூட்டணி தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களை எதிர்க்கட்சியான பா.ஜனதா வளைக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சுமார் 30 பேரை, அண்டை மாநிலமான சத்தீஷ்காரின் தலைநகர் ராய்ப்பூருக்கு இடமாற்றியது. கடந்த 30-ந் தேதி முதல் ராய்ப்பூர் அருகே உள்ள சொகுசு விடுதியில் அவர்கள் தங்கவைக்கப்பட்டு இருந்தனர்.
இந்த நிலையில் மாநில அரசியலில் நீடித்து வரும் குழப்பத்தை போக்குவதற்காக, சட்டசபையில் நம்பிக்கை தீர்மானம் கொண்டு வர முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் முடிவு செய்தார். ஜார்கண்ட் சட்டசபையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவுக்கு 30 எம்.எல்.ஏ.க்களும், காங்கிரசுக்கு 18 எம்.எல்.ஏ.க்களும், ராஷ்டிரீய ஜனதாதளத்துக்கு ஒரு எம்.எல்.ஏ.வும் உள்ளனர். எதிர்க்கட்சியான பா.ஜனதாவுக்கு 26 எம்.எல்.ஏ.க்கள் உள்ளன.
இந்த நிலையில், ஜார்கண்ட் சட்டசபையில் இன்று சிறப்பு சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நம்பிக்கை தீர்மானத்தை முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் கொண்டுவந்தார்.இதில் கலந்து கொள்ளாமல் பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
இதனையடுத்து நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் 48 எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் ஹேமந்த் சோரன் தலைமையிலான அரசு வெற்றி பெற்றுள்ளது என அறிவிக்கப்பட்டது.