ஜார்க்கண்ட் முதல்-மந்திரி வீட்டில் அமலாக்கத்துறை மீண்டும் விசாரணை
|நிலமோசடி தொடர்பான வழக்கில் நேற்று முன்தினம் ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை 9-வது முறையாக சம்மன் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.
புதுடெல்லி,
ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற நிலமோசடி தொடர்பான வழக்கில் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விசாரணைக்கு கடந்த 16 முதல் 20-ம் தேதிக்குள் ஆஜராக வேண்டும் என்று முதல்-மந்திரி ஹேமந்த் சோரனுக்கு கடந்த 13-ம் தேதி அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியிருந்தது. அதற்கு 20-ம் தேதி தனது வீட்டில் வைத்து தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்யலாம் என்று முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் பதிலளித்திருந்தார்.
அதன்படி இன்று மதியம் முதல்-மந்திரியிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் முதல்வர் மாளிகைக்கு வர உள்ளதாக தெரிவித்திருந்தனர். இதையடுத்து முதல்-மந்திரியின் இல்லத்தில் விசாரணை மேற்கொள்ளும்போது, பாதுகாப்பை உறுதி செய்யவும், சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும் வலியுறுத்தி அமலாக்கத்துறை சார்பில், தலைமைச் செயலாளர், காவல்துறை இயக்குனர் மற்றும் ராஞ்சி மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோருக்கு கடிதம் அனுப்பப்பட்டது.
மேலும், இந்த வழக்கு தொடர்பாக கடந்த 20-ம் தேதி ஜார்க்கண்ட்டில் உள்ள ஹேமந்த் சோரனின் இல்லத்தில் வைத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர். கிட்டத்தட்ட 7 மணிநேரம் விசாரணை நடத்தியது. எனினும், விசாரணை முழுமையாக முடியவில்லை என்று கூறி ஹேமந்த் சோரனுக்கு, அமலாக்கத்துறை சார்பில் 9-வது முறையும் சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், ஒருமுறை கூட அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதையடுத்து நேற்று முன்தினம் 9-வது முறையாக அமலாக்கத்துறை ஹேமந்த் சோரனுக்கு சம்மன் அனுப்பியது.
அதன்படி, ஜனவரி 27-ம் தேதி முதல் 31-ம் தேதிக்குள் ஏதேனும் ஒருநாள் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று கடிதம் அனுப்பியது. இக்கடிதத்துக்கு ஹேமந்த் சோரன் தரப்பில் எந்தவித அதிகாரபூர்வ பதிலும் அனுப்பப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று டெல்லியில் உள்ள ஹேமந்த் சோரனின் இல்லத்தில் அமலாக்கத்துறையினர் மீண்டும் விசாரணை நடத்தி வருகின்றனர். பல முறை சம்மன் அனுப்பியும் ஹேமந்த் சோரன் ஆஜராகாததால் அவரது இல்லத்திற்கு அமலாக்கத்துறை வருகை தந்துள்ளது.