கோட்டயம் அருகே பாஸ்டர் வீட்டில் 48 பவுன் நகை திருட்டு - மகன் கைது
|பாஸ்டர் வீட்டில் 48 பவுன் நகை திருட்டு போன சம்பவத்தில் பாஸ்டரின் மகனை போலீசார் கைது செய்தனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் உள்ள கோட்டயம் மாவட்டம் பாம்பாடியை சேர்ந்தவர் பாஸ்டர் ஜேக்கப். இவர் மனைவி மற்றும் மகன் ஷினோ (36) ஆகியோருடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார். ஷினோவுக்கு மனைவி மற்றும் மகன் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பாஸ்டர் ஜேக்கப் பிரார்த்தனைக்காக மனைவியுடன் ஆலயத்திற்கு சென்றிருந்தார். அப்போது வீட்டில் இருந்த 48 பவுன் நகைகள், ரூ.80 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவை மாயமானது. இதுதொடர்பாக பாஸ்டர் ஜேக்கப் பாம்பாடி போலீசில் புகார் அளித்தார்.
அதை தொடர்ந்து, காஞ்சிரப்பள்ளி துணை போலீஸ் சூப்பிரண்டு என்.பாலு குட்டன் தலைமையில், பாம்பாடி போலீசார் விரைந்து வந்து சோதனை நடத்தினர்.
அப்போது வீட்டின் சமையல் அறை கதவை உடைத்து உள்ளே சென்ற மர்ம ஆசாமி மிளகாய் பொடியை தூவி விட்டு படுக்கை அறைக்குள் நுழைந்து பீரோவை உடைத்து நகை மற்றும் ரொக்க பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து மோப்ப 'நாய் வரவழைக்கப்பட்டது. மேலும் கைரேகை நிபுணர்களின் உதவியுடன் கைரேகையும் சேகரிக்கப்பட்டன. இந்த நிலையில் கொள்ளை சம்பவ இடத்தில் பதிவாகி இருந்த கைரேகையும், ஷினோவின் கைவிரல் ரேகையும் ஒத்துப்போனது.
இதை தொடர்ந்து ஷினோவை அழைத்து போலீசார் விசாரணை நடத்தினர். முதலில் திருட்டு குறித்து மறுத்த ஷினோ, பின்னர் நகை மற்றும் பணத்தை திருடியதை ஒப்புக்கொண்டார்.
இதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், கொள்ளையடித்த நகையினை ஷினோ தனது கடைக்கு அருகில் உள்ள குடோனில் மறைத்து வைத்து இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.
மேலும் ரூ.80 ஆயிரத்தையும் கைப்பற்றினர். தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக கடனை அடைக்க சொந்த வீட்டிலேயே திருடிய ஷினோவை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.