< Back
தேசிய செய்திகள்
ஆள் கடத்தல் வழக்கு: கைது செய்யப்பட்ட எச்.டி. ரேவண்ணா கோர்ட்டில் ஆஜர்
தேசிய செய்திகள்

ஆள் கடத்தல் வழக்கு: கைது செய்யப்பட்ட எச்.டி. ரேவண்ணா கோர்ட்டில் ஆஜர்

தினத்தந்தி
|
5 May 2024 7:35 PM IST

ஆள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட எச்.டி. ரேவண்ணா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

பெங்களுரூ,

கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா. இவர் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் ஆவார். மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த பிரஜ்வல் ரேவண்ணா ஒலேநரசிப்புரா தொகுதி எம்.எல்.ஏ. எச்.டி.ரேவண்ணாவின் மகன் ஆவார்.

பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்யும் புகைப்படங்களும், வீடியோக்களும் சமூகவலைதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக ரேவண்ணா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் அவர் வெளிநாடு தப்பிச்சென்றார். இந்த வழக்கு சிறப்பு புலனாய்வு குழுவால் விசாரிக்கப்பட்டு வருகிறது. அதேவேளை, ரேவண்ணா ஜெர்மனி தப்பிச்சென்றதாக தகவல் வெளியான நிலையில் அவரை கைது செய்ய சி.பி.ஐ. புளூகார்னர் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதனிடையே, எச்.டி. ரேவண்ணாவின் வீட்டில் 5 ஆண்டுகளாக ஒரு பெண் வேலை செய்துள்ளார். அந்த பெண் கடந்த 3 ஆண்டுகளுக்குமுன் வேலையை விட்டு நின்றுள்ளார்.

தற்போது பாலியல் புகார் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா தேடப்பட்டுவரும் நிலையில் எச்.டி. ரேவண்ணாவின் வீட்டில் வேலை செய்த முன்னாள் பணிப்பெண் கடந்த 29ம் தேதி மாயமானார். இது குறித்து அப்பெண்ணின் மகன் போலீசில் புகார் அளித்தார்.

அந்த புகாரில், கடந்த 26ம் தேதி எச்.டி. ரேவண்ணாவின் நெருங்கிய உதவியாளர் சதீஷ் எனது தாயை அழைத்து சென்றார். அன்று மாலை என் தாயார் வீட்டிற்கு வந்துவிட்டார். அதன்பின்னர், கடந்த 29ம் தேதி எனது தாயை சதீஷ் மீண்டும் அழைத்து சென்றார். அன்றிலிருந்து எனது தாயார் வீட்டிற்கு வரவில்லை அவர் கடத்தப்பட்டுவிட்டதாக போலீசில் புகார் அளித்தார்.

இந்த புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தீவிர விசாரணை நடத்திய போலீசார், கலிநலி பகுதியில் உள்ள எச்.டி. ரேவண்ணாவின் நெருங்கிய கூட்டாளி ராஜசேகரின் பண்ணை தோட்டத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த கடத்தப்பட்ட பெண்ணை போலீசார் நேற்று பத்திரமாக மீட்டனர். இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக எச்.டி.ரேவண்ணா, சதீஷ், ராஜசேகர் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

கடத்தல் வழக்கில் போலீசாரின் கைது நடவடிக்கையில் இருந்து பாதுகாப்பு அளிக்கக்கோரி எச்.டி. ரேவண்ணா பெங்களூரு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த கோர்ட்டு, கைது நடவடிக்கைக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தது.

இதையடுத்து, முன்னாள் பிரதமரும், தனது தந்தையுமான எச்.டி. தேவகவுடா வீட்டில் இருந்த எச்.டி.ரேவண்ணாவை சிறப்பு புலனாய்வு போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள எச்.டி. ரேவண்ணா இன்று பெங்களூரு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்