< Back
தேசிய செய்திகள்
27 கிலோ தங்க நகைகள் உள்பட ஜெயலலிதாவின் பொருட்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க உத்தரவு
தேசிய செய்திகள்

27 கிலோ தங்க நகைகள் உள்பட ஜெயலலிதாவின் பொருட்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க உத்தரவு

தினத்தந்தி
|
20 Feb 2024 4:43 PM IST

ஜெயலலிதாவின் பொருட்களை அடுத்த மாதம் 7-ந் தேதிக்குள் தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு பெங்களூரு சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு,

சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் பொருட்களை ஏலம் விட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி, பெங்களூருவை சேர்ந்த சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி, பெங்களூரு சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் ஒரு மனுவை தாக்கல் செய்தார்.

இந்த மனு மீது விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் (ஜனவரி) 22-ந் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, கர்நாடக அரசு வசம் உள்ள ஜெயலலிதாவின் 27 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகளை தமிழக அரசிடமே ஒப்படைக்க வேண்டும் என்றும், இதற்காக தமிழக உள்துறை முதன்மை செயலாளர் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி மோகன் உத்தரவிட்டு இருந்தார். மேலும் கர்நாடக அரசுக்கு வழக்கு செலவு கட்டணமாக ரூ.5 கோடியை தமிழக அரசு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

நேற்று இந்த வழக்கு, பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் நீதிபதி மோகன் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி மோகன், சொத்து குவிப்பு வழக்கில் கர்நாடக அரசு வசம் உள்ள ஜெயலலிதாவின் பொருட்களை வருகிற மார்ச் மாதம் (அடுத்த மாதம்) 6, 7-ந் தேதிகளில் தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டார்.

இந்த வழக்கு கட்டணம் ரூ.5 கோடியை தமிழக அரசு இன்னும் வழங்கவில்லை என்று கர்நாடக சிறப்பு வக்கீல் கோர்ட்டில் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை வருகிற 6-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்