இட ஒதுக்கீட்டு கோரிக்கையை மராட்டிய அரசு ஏற்றது.. உண்ணாவிரதத்தை நிறைவு செய்த மராத்தா சமூக தலைவர்
|முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, வஷி பகுதியில் மனோஜ் ஜரங்கேவை சந்தித்து, போராட்டத்தை கைவிடும்படி கேட்டுக்கொண்டார்.
நவி மும்பை:
மராட்டிய மாநிலத்தில் உள்ள மராத்தா சமூகத்தினருக்கு கல்வி மற்றும் அரசுப் பணிகளில் இட ஒதுக்கீடு கோரி, மராத்தா சமூகத் தலைவர் மனோஜ் ஜரங்கே பாட்டீல் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தார். கோரிக்கைகளை வலியுறுத்தி குடியரசு தினத்தன்று மும்பையில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்திருந்தார்.
இதற்காக ஜல்னா மாவட்டத்தில் இருந்து மும்பையை நோக்கிய பேரணியை கடந்த 20-ம் தேதி அவர் துவங்கினார். பல்லாயிரக்கணக்கான ஆதரவாளர்களுடன் பேரணியாக வந்த அவர், நேற்று மும்பை வந்தடைந்தார். அவருக்கு மராத்தா சமூகத்தினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கினார். கோரிக்கைகள் தொடர்பாக அவசர சட்டம் நிறைவேற்றப்படாவிட்டால், காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டிருப்பதாக கூறினார். போராட்டம் தீவிரமடைந்ததால் மாநிலத்தில் பதற்றமான சூழல் உருவானது.
தெற்கு மும்பையில் உள்ள ஆசாத் மைதானத்தில் உண்ணாவிரத போராட்டத்தை தொடர திட்டமிட்டிருந்தார். வஷி பகுதியை அடைந்தபோது அவரை அரசு அதிகாரிகள் தொடர்ந்து சந்தித்து கோரிக்கைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தையின் முடிவில் மராத்தா சமூகத்தினரின் கோரிக்கைகளை நிறைவேற்ற மாநில அரசு ஒப்புதல் அளித்தது. குறிப்பாக அனைத்து மராத்தியர்களுக்கும் குன்பி சான்றிதழ், மழலையர் பள்ளி முதல் முதுகலை படிப்பு வரை இலவசக் கல்வி, அரசு வேலையில் இட ஒதுக்கீடு உள்ளிட்டவை இந்த கோரிக்கைகளில் அடங்கும்.
இடஒதுக்கீடு குறித்த அரசுத் தீர்மானத்தை மாநில அரசு வெளியிட்டுள்ளது. மாநில மந்திரிகள் தீபக் கேசர்கர் மற்றும் மங்கள் பிரபாத் லோதா ஆகியோர், மனோஜ் ஜரங்கே பாட்டீலை சந்தித்து அவரிடம் கோரிக்கைகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக கூறி அதுதொடர்பான கடிதத்தை வழங்கினர்.
அதன்பின்னர் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, மனோஜ் ஜரங்கேவை சந்தித்து, போராட்டத்தை திரும்ப பெறும்படி கேட்டுக்கொண்டார். அதனை ஏற்ற மனோஜ் ஜரங்கே போராட்டத்தை கைவிட்டார். முதல்-மந்திரி கொடுத்த பழச்சாறை குடித்து உண்ணாவிரதத்தை நிறைவு செய்தார். கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட முதல்-மந்திரிக்கு நன்றி தெரிவித்தார். அரசு தங்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டதையடுத்து போராட்டக்காரர்கள் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.