< Back
தேசிய செய்திகள்
பே-சி.எம். போஸ்டர் விவகாரத்தில் காங்கிரசுக்கு தக்க பதிலடி கொடுக்க பா.ஜனதா மேலிடம் உத்தரவு
தேசிய செய்திகள்

'பே-சி.எம்.' போஸ்டர் விவகாரத்தில் காங்கிரசுக்கு தக்க பதிலடி கொடுக்க பா.ஜனதா மேலிடம் உத்தரவு

தினத்தந்தி
|
26 Sept 2022 12:15 AM IST

‘பே-சி.எம்.’ போஸ்டர் விவகாரத்தில் காங்கிரசுக்கு தக்க பதிலடி கொடுக்க பா.ஜனதா மேலிடம் உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு:

'பே-சி.எம்.' போஸ்டர்

கர்நாடகத்தில் 40 சதவீத கமிஷன் அரசு நடப்பதாக காங்கிரஸ் தலைவர்கள் குற்றச்சாட்டு கூறி வருகின்றனர். மேலும் 40 சதவீத கமிஷனுக்கு எதிராக முதல்-மந்திரி புகைப்படத்துடன் கூடிய 'பே-சி.எம்.' என்ற 'கியூ.ஆர்.' கோடுடன் கூடிய போஸ்டா்களை ஒட்டி காங்கிரஸ் கட்சியினர் நூதன பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இது முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையும், பா.ஜனதாவுக்கும் பெரும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.

'பே-சி.எம்.' போஸ்டர் விவகாரத்தால் பா.ஜனதாவுக்கு மக்கள் மத்தியில் கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளதாக எம்.எல்.ஏ.க்கள், சில மூத்த தலைவர்கள் கருதுகிறார்கள். இதையடுத்து, போஸ்டர் விவகாரம் குறித்து பா.ஜனதா மேலிட தலைவர்களுக்கு புகார் அளிக்க எம்.எல்.ஏ.க்கள், மூத்த தலைவர்கள் தீர்மானித்திருப்பதாக தகவல்கள் வெளியானது.

பதிலடி கொடுக்க உத்தரவு

இந்த நிலையில், 'பே-சி.எம்.' போஸ்டர் விவகாரத்தால் கர்நாடக பா.ஜனதா அரசுக்கு மட்டுமின்றி ஒட்டு மொத்தமாக தேசிய அளவில் பா.ஜனதாவுக்கு கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளதாக மேலிட தலைவர்கள் கருதுகின்றனர். இதையடுத்து, பே-சி.எம். போஸ்டர் விவகாரத்தை கையில் எடுத்து காங்கிரசுக்கு தக்க பதிலடி கொடுக்கும்படி மாநில தலைவர் நளின்குமார் கட்டீல், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மற்றும் மந்திரிகளுக்கு பா.ஜனதா மேலிட தலைவர்கள் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, கர்நாடகத்தில் ராகுல்காந்தி பாதயாத்திரை மேற்கொள்ளும் போது, காங்கிரஸ் ஆட்சியில் நடந்த ஊழல்கள் குறித்து சமூக வலைத்தளங்கள் மற்றும் சுவர்களில் போஸ்டர்களை ஒட்டி பிரசாரம் செய்ய பா.ஜனதா தலைவர்கள் தீர்மானித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேலும் செய்திகள்