மைசூருவில் ஜனதா தளம் (எஸ்) கட்சியினர் போராட்டம்
|தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதை கண்டித்து மைசூருவில் ஜனதா தளம் (எஸ்) கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
மைசூரு
காவிரி நீர் பங்கீடு
கர்நாடகம், தமிழகம் இடையே காவிரி நீரை பங்கிட்டுக் கொள்வதில் பிரச்சினை இருந்து வருகிறது. இந்த நிலையில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவின்பேரில் தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
இதற்கு கண்டனம் தெரிவித்து விவசாயிகள், கன்னட அமைப்புகள் உள்பட பல்வேறு அமைப்புகளும், பா.ஜனதா, ஜனதா தளம்(எஸ்) உள்ளிட்ட கட்சிகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
குறிப்பாக மண்டியா, மைசூரு ஆகிய மாவட்டங்களில் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இந்தநிலையில் நேற்று கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதை கண்டித்து மைசூரு காந்தி சவுக்கில் ஜனதா தளம் (எஸ்) கட்சியினர் தர்ணா போராட்டம் நடத்தினர்.
இதில் காலி குடங்களுடன் பெண்கள் கலந்து கொண்டனர். அப்போது போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கூறுகையில், காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு படி தமிழகத்திற்கு கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
தமிழகத்திற்கு சாதகம்
கடந்த முறை 15 நாட்கள் தண்ணீர் திறந்து விட காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. தற்போது மீண்டும் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட கூறுவது எந்த விதத்தில் நியாயம். இதுகுறித்து மாநில அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய வேண்டும்.
சுப்ரீம் கோர்ட்டு இந்த தீர்ப்பை பரிசீலனை செய்ய வேண்டும். நேற்றுமுன்தினம் வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடக்கோரி உத்தரவிடப்பட்டு்ள்ளது. இந்த தீர்ப்பும் தமிழகத்திற்கு சாதகமாகவே உள்ளது.
காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் இரு மாநிலங்களையும் சமமாக பார்க்க வேண்டும். கர்நாடக அணைகளில் நீர் இருந்த போது தமிழகம் கேட்பதற்கு முன்பே தண்ணீர் திறந்து விட்டுள்ளோம்.
ஆனால் தற்போது மாநிலத்தில் உள்ள அணைகள் நிரம்பாத போது எப்படி தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
கலந்து கொண்டவர்கள்
போராட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கே.மகாதேவு, அஸ்வின்குமார், மைசூரு மாவட்ட ஜனதா தளம் (எஸ்) கட்சி மாவட்ட தலைவர் நரசிம்மமூர்த்தி, மைசூரு நகர தலைவர் கே.டி. செலுவேகவுடா, மாநகராட்சி ஜனதா தளம் (எஸ்) கட்சி கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேப்போல் மைசூரு மாநகராட்சி அலுவலகம் முன்பு கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தினர். அப்போது போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அப்பகுதியில் உள்ள அஞ்சல் பெட்டியில் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி போட்டனர்.
அதில், காவிரி மேலாண்மை தீர்ப்பை மறுபரீசிலனை செய்ய வேண்டும்.
காவிரி விவகாரம்
காவிரி விவகாரத்தில் கர்நாடக மக்களுக்கு மத்திய அரசு பாரபட்சம் காட்டி வருகிறது. இந்த ஆண்டு மாநிலத்தில் போதுமான அளவு தென்மேற்கு பருவமழை பெய்யவில்லை.
இதனால் அணைகளில் போதுமான தண்ணீர் நிரம்பவில்லை. இப்படி இருக்கும் நிலைமையில் நாங்கள் எப்படி தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியும்.
இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட்டு பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். நாங்கள் (கர்நாடகம்- தமிழகம்) அண்ணன்- தம்பி போல் பழகி கொண்டிருக்கிறோம். இந்த பிரச்சினையால் இரு மாநிலங்களும் விரோதி போல ஆகி உள்ளோம். எனவே இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.