< Back
தேசிய செய்திகள்
ஜனதாதளம்(எஸ்) கட்சி மாநில தலைவர் சி.எம்.இப்ராகிம் அதிரடி நீக்கம்; தேவேகவுடா அறிவிப்பு
தேசிய செய்திகள்

ஜனதாதளம்(எஸ்) கட்சி மாநில தலைவர் சி.எம்.இப்ராகிம் அதிரடி நீக்கம்; தேவேகவுடா அறிவிப்பு

தினத்தந்தி
|
20 Oct 2023 12:15 AM IST

பா.ஜனதாவுடன் கூட்டணியை எதிர்த்ததால் ஜனதா தளம் (எஸ்) கட்சியின் மாநில தலைவர் சி.எம்.இப்ராகிமை அதிரடியாக நீக்கி தேவேகவுடா அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

பெங்களூரு:

கர்நாடக சட்டசபைக்கு கடந்த மே மாதம் தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. பா.ஜனதா பிரதான எதிர்க்கட்சியாக உள்ளது. ஜனதா தளம் (எஸ்) கட்சி 19 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.

காங்கிரஸ் ஆட்சி அமைந்த பிறகு ஜனதா தளம் (எஸ்) கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் கவுன்சிலர்கள், முக்கிய நிர்வாகிகள் பலர் காங்கிரசில் சேர்ந்து வருகிறார்கள். இதனால் அக்கட்சியின் தேசிய தலைவர் தேவேகவுடா, முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி ஆகியோர் அதிர்ச்சி அடைந்தனர். இதே நிலை நீடித்தால் கட்சியை காப்பாற்ற முடியாது என்று அவர்கள் கருதினர்.

காங்கிரசை வீழ்த்தி கட்சியை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் கட்சியின் மதச்சார்பற்ற கொள்கைக்கு மாறாக பா.ஜனதாவுடன் ஜனதாதளம்(எஸ்) கை கோர்த்துள்ளது. இதற்கு உள்கட்சி நிர்வாகிகள் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அத்தகையவர்கள் கட்சி தாவி வருகிறார்கள். தேவேகவுடாவின் அரசியல் வாழ்க்கையில் இதற்கு முன்பு எப்போதும் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்தது இல்லை. அவர் பா.ஜனதாவின் கொள்கைகளை மிக கடுமையாக எதிர்த்து வந்தார்.

பா.ஜனதாவுடன் கூட்டணி அமைப்பதற்கு ஜனதா தளம் (எஸ்) கட்சியின் மாநில தலைவர் சி.எம்.இப்ராகிம் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெங்களூருவில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். அதில் பேசிய சி.எம்.இப்ராகிம், "நாங்கள் தான் உண்மையான ஜனதாதளம் (எஸ்) கடசி. எக்காரணம் கொண்டும் பா.ஜனதாவுடன் கூட்டணி வைக்க மாட்டோம். இந்தியா கூட்டணியை நாங்கள் ஆதரிக்கிறோம்" என்றார்.

அதைத்தொடர்ந்து குமாரசாமி, அவரது மகன் நிகில் குமாரசாமி ஆகியோரை கட்சியை விட்டு நீக்கியதாக சி.எம்.இப்ராகிம் பெயரில் ஒரு கடிதம் வெளியாகி வைரலானது. அதன்பிறகு கட்சியின் மாநில தலைவர் சி.எம்.இப்ராகிமை நீக்கியதாக முன்னாள் பிரதமர் தேவேகவுடா பெயரில் ஒரு கடிதம் வெளியாக நேற்று முன்தினம் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் சி.எம்.இப்ராகிம் கட்சி விரோத செயல் தேவேகவுடா, குமாரசாமிக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தியது. அவர் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும் என்று குமாரசாமி ஆவேசமாக கூறினார்.

இந்த நிலையில் ஜனதா தளம் (எஸ்) கட்சியின் மாநில தலைவர் சி.எம்.இப்ராகிமை கட்சியை விட்டு நீக்கி கட்சியின் தேசிய தலைவர் தேவேகவுடா அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அவர் மட்டுமின்றி கட்சியின் ஒட்டுமொத்த மாநில குழுவும் கலைக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக கட்சியின் தற்காலிக மாநில தலைவராக குமாரசாமியை தேவேகவுடா நியமனம் செய்துள்ளார்.

தேவேகவுடாவின் எதிர்பார்ப்பு ஏமாற்றத்தில் முடிந்தது

ஜனதா தளம் (எஸ்) கட்சிக்கு வருவதற்கு முன்பு சி.எம்.இப்ராகிம் காங்கிரசில் இருந்தார். எம்.எல்.சி.யாக இருந்த அவர் மேல்-சபை எதிர்க்கட்சி தலைவா் பதவியை கேட்டார். ஆனால் காங்கிரஸ் மேலிடம் அவருக்கு அந்த பதவியை வழங்க மறுத்துவிட்டது. இதையடுத்து தனது எம்.எல்.சி. பதவியை ராஜினாமா செய்த அவர், காங்கிரசை விட்டு விலகி ஜனதாதளம் (எஸ்) கட்சியில் சோ்ந்தார். அதைத்தொடர்ந்து அவர் கடந்த ஆண்டு (2022) ஏப்ரல் 17-ந் தேதி கட்சியின் மாநில தலைவராக நியமிக்கப்பட்டார். முஸ்லிம் ஒருவரை கட்சி தலைவராக நியமித்தால் முஸ்லிம் மக்களின் வாக்குகள் நமக்கு கிடைக்கும் என்று தேவேகவுடா, குமாரசாமி ஆகியோர் கருதினர். ஆனால் அவர்களின் எதிர்பார்ப்பு ஏமாற்றத்தில் முடிந்தது. காரணம் கடந்த சட்டசபை தேர்தலில் முஸ்லிம்களின் பெருவாரியான வாக்குகள் காங்கிரசுக்கு கிடைத்தது. அதனால் ஜனதா தளம் (எஸ்) படுதோல்வி அடைந்தது மட்டுமின்றி வாக்கு வங்கியையும் இழந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் காங்கிரசில் சேருகிறாா்?

கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ள சி.எம்.இப்ராகிம், முதல்-மந்திரி சித்தராமையாவின் நெருங்கிய நண்பர் ஆவார். காங்கிரசில் இருந்து விலகியபோது அவரை தக்க வைத்துக்கொள்ள சித்தராமையா தீவிர முயற்சி மேற்கொண்டார். ஆனால் அதை அவர் கேட்கவில்லை. இந்த நிலையில் சி.எம்.இப்ராகிம் மீண்டும் காங்கிரசில் சேருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் காங்கிரசிலேயே நீடித்து இருந்தால் இன்று மந்திரியாக இருந்திருக்க வாய்ப்பு உள்ளது. அந்த அளவுக்கு கட்சியில் மூத்த தலைவராக இருந்தார். தற்போது மீண்டும் காங்கிரசுக்கு திரும்பினாலும் உடனடியாக அவருக்கு எம்.எல்.சி. உள்ளிட்ட பதவி கிடைக்காது என்று சொல்லப்படுகிறது.

மேலும் செய்திகள்