அம்பானி வீட்டு திருமணத்திற்காக ஜாம்நகர் விமான நிலையத்துக்கு 10 நாட்கள் சர்வதேச அந்தஸ்தா? வெடித்தது சர்ச்சை
|முகேஷ் அம்பானி மகன் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டத்தில் பங்கேற்க வரும் பிரபலங்களுக்காக குஜராத்தின் ஜாம்நகர் விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து கொடுக்கப்பட்டு இருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.
ஆமதபாத்,
தொழிலதிபர் முகேஷ் அம்பானி மகன் திருமண விழாவை முன்னிட்டு, குஜராத் ஜாம் நகர் விமான நிலையத்துக்கு 10 நாட்கள் சர்வதேச அங்கீகாரம் வழங்கிய மத்திய அரசின் முடிவு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி. இவருக்கும் ராதிகா மெர்ச்சன்ட் என்பவருக்கும் வரும் ஜூலை மாதம் திருமணம் நடைபெற உள்ளது. இந்நிலையில், குஜராத் மாநிலம், ஜாம் நகரில் ப்ரீ வெட்டிங் ஷுட் உள்ளிட்ட திருமணத்துக்கு முந்தைய கொண்டாட்டங்கள் தற்போது நடைபெற்று வருகிறது.
இதில் பாலிவுட் நட்சத்திரங்கள், விளையாட்டு பிரபலங்கள், உலக தொழிலதிபர்கள் உள்ளிட்ட ஏராளமான முக்கிய விருந்தினர்கள் வருகை தந்துள்ளதால் கடந்த இரண்டு நாட்களாக ஜாம் நகர் நட்சத்திர பட்டாளங்களால் நிறைந்துள்ளது. இந்நிலையில் ஜாம் நகர் விமான நிலையத்துக்கு பத்து நாள்களுக்கு சர்வதேச விமான நிலைய அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. அம்பானி வீட்டு திருமண நிகழ்வுக்காக மத்திய அரசு இந்த அனுமதியை வழங்கியுள்ளதாக கூறி, சமூக வலைதளங்களில் பலரும் கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர்.