< Back
தேசிய செய்திகள்
ஜம்மு காஷ்மீர் தேர்தல்: நாளை முதல் கட்ட வாக்குப்பதிவு

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீர் தேர்தல்: நாளை முதல் கட்ட வாக்குப்பதிவு

தினத்தந்தி
|
17 Sept 2024 6:21 PM IST

ஜம்மு காஷ்மீரில் முதல் கட்டமாக 24 தொகுதிகளில் நாளை வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீரில் மொத்தமுள்ள 90 சட்டபேரவை தொகுதிகளுக்கு மூன்று கட்ட தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதன்படி முதல் கட்டமாக 24 தொகுதிகளுக்கு நாளையும், இரண்டாம் கட்டமாக 26 தொகுதிகளுக்கு வரும் 25-ம் தேதியும், மூன்றாம் கட்டமாக 40 தொகுதிகளுக்கு அக்டோபர் 1-ம் தேதியும் தேர்தல் நடத்தப்பட உள்ளது. வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 8-ம் தேதி நடைபெறுகிறது.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஜம்மு-காஷ்மீர் பேரவைத் தேர்தலில் பா.ஜ.க., மக்கள் ஜனநாயக கட்சி ஆகியவை தனித்தும், காங்கிரஸ்-தேசிய மாநாட்டுக் கட்சி ஆகியவை கூட்டணியாகவும் போட்டியிடுகின்றன.

இந்நிலையில் பாம்போர், டிரால், புல்வாமா, ராஜ்போரா, ஜைனபோரா, சோபியான், குல்காம், தூரு, அனந்த்நாக் மேற்கு, அனந்த்நாக் உள்பட முதல்கட்ட தேர்தல் நடைபெறும் 24 தொகுதிகளில் நேற்று மாலை 5 மணியுடன் பிரசாரம் நிறைவடைந்துள்ளது. இவற்றில் 16 தொகுதிகள் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியிலும், 8 தொகுதிகள் ஜம்மு பகுதியிலும் அமைந்துள்ளன.

முதல் கட்ட தேர்தலில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை சுமார் 23 லட்சமாகும். மொத்த வேட்பாளர்கள் 219 பேர். காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்னர், நடைபெறும் முதல் தேர்தல் இதுவாகும்.

இந்நிலையில் ஜம்மு-காஷ்மீரில் முதல் கட்ட பேரவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நாளை காலை தொடங்க உள்ளது. இதற்காக வாக்குச் சாவடி மையங்களுக்கு வாக்கு இயந்திரம் உள்ளிட்டவை ராணுவத்தின் பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லும் பணிகளில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

முதல்கட்ட தேர்தல் நாளை நடைபெற உள்ள சூழலில், குல்காம் மாவட்ட நிர்வாகம் சோதனையை தீவிரப்படுத்தி உள்ளது. பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு உள்ளது. இதன்படி, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும், சிறப்பு போலீஸ் சூப்பிரெண்டின் மேற்பார்வையின் கீழ் வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு வருகின்றன. போலீசாரின் பாதுகாப்புடன் இந்த சோதனையானது இரவிலும் நடந்து வருகிறது. இதேபோன்று பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளிலும் இரவிலும் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டது.

முன்னதாக ஜம்மு-காஷ்மீரில் கடந்த 2014 சட்டபேரவைத் தேர்தலின்போது மொத்தம் 87 தொகுதிகள் இருந்தன. இதில் மக்கள் ஜனநாயக கட்சிக்கு 28 இடங்களும், பா.ஜ.க.வுக்கு 25 இடங்களும், தேசிய மாநாட்டுக் கட்சிக்கு 15 இடங்களும், காங்கிரசுக்கு 12 இடங்களும் கிடைத்தன.

மேலும் செய்திகள்