பஞ்சாப்: விரைவு ரெயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்
|வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து பஞ்சாப் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சண்டிகார்,
நாடு முழுவதும் சமீப நாட்களாக ரெயில் நிலையங்கள், கல்வி நிறுவனங்கள், விமான நிலையங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு மர்ம நபர்களால் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், ஜம்முவில் இருந்து ராஜஸ்தானின் ஜோத்பூருக்கு சென்று கொண்டிருந்த விரைவு ரெயிலில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு செல்போன் மூலமாக மிரட்டல் வந்துள்ளது. இதனையடுத்து ரெயில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள காசு பேகு ரெயில் நிலையத்தில் பாதி வழியில் நிறுத்தப்பட்டது.
இதனால் ரெயிலில் இருந்து பயணிகள் பதறியடித்து வெளியேறிய நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் ரெயில் முழுவதும் தீவிர சோதனையிட்டனர். சோதனையில் வெடிகுண்டு எதுவும் சிக்காததால், வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து பஞ்சாப் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.