< Back
தேசிய செய்திகள்
ஜம்மு:  பயங்கரவாதிகள் தாக்குதலில் ராணுவ வீரர்கள் 4 பேர் மரணம்; 6 பேர் காயம்
தேசிய செய்திகள்

ஜம்மு: பயங்கரவாதிகள் தாக்குதலில் ராணுவ வீரர்கள் 4 பேர் மரணம்; 6 பேர் காயம்

தினத்தந்தி
|
8 July 2024 2:55 PM GMT

ஜம்மு மற்றும் காஷ்மீரில் கடந்த 48 மணிநேரத்தில் நடந்த இருவேறு சம்பவங்களில் மொத்தம் 6 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.

ஜம்மு,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தின் மச்சேதி பகுதியில் இந்திய ராணுவத்தின் வாகனம் ஒன்று ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்துள்ளது. அந்த வாகனம் சென்று கொண்டிருந்தபோது, பயங்கரவாதிகள் திடீரென அதனை நோக்கி தாக்குதல் நடத்தினர். இதற்கு படை வீரர்களும் பதிலடி கொடுத்தனர்.

எனினும், தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் மரணம் அடைந்தனர். 6 பேர் காயமடைந்து உள்ளனர். கத்துவா நகரில் இருந்து 150 கி.மீ. தொலைவில் லோஹாய் மல்ஹார் என்ற இடத்தில் பத்னோட்டா கிராமத்தில் ராணுவத்தின் ரோந்து பணியின்போது, இந்த தாக்குதல் நடந்துள்ளது. இதனை தொடர்ந்து கூடுதல் படையினர் அந்த பகுதியில் குவிக்கப்பட்டு உள்ளனர்.

ஜம்மு மற்றும் காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் மோதர்காம் கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளனர் என போலீசாருக்கு சில நாட்களுக்கு முன் தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து, மத்திய ரிசர்வ் போலீசார், உள்ளூர் போலீசார் ஆகியோருடன் இணைந்து பாதுகாப்பு படையினர் நேற்று முன்தினம் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அவர்கள் கிராமத்திற்குள் நுழைந்ததும், அந்த பகுதியை பாதுகாப்பு வளையம் ஏற்படுத்தி, தங்களது கட்டுக்குள் கொண்டு வந்தனர். அப்போது, திடீரென பயங்கரவாதிகள் வீரர்களை நோக்கி சுட்டனர். இதில் வீரர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. எனினும், மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்து விட்டார்.

இதேபோன்று, குல்காம் மாவட்டத்தின் பிரிசால் பகுதியில் நடந்த என்கவுண்ட்டரில் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். எனினும் அதில் வீரர் ஒருவர் உயிரிழந்து உள்ளார். இந்த இருவேறு சம்பவங்களில் மொத்தம் 6 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவம் நடந்து 48 மணிநேரம் கூட ஆகாத சூழலில், ஜம்முவில் ரோந்து சென்ற ராணுவ வீரர்களின் வாகனத்தின் மீது நடந்த பயங்கரவாத தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்து உள்ளதுடன், 6 ராணுவ வீரர்கள் காயமடைந்தனர்.

மேலும் செய்திகள்