கர்நாடக சிறைகளில் ஜாமர் கருவிகள் பொருத்த திட்டம்
|செல்போன் பயன்பாட்டை தடுக்க கர்நாடக சிறைகளில் ஜாமர் கருவிகள் பொருத்தப்படும் என்று போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா கூறினார்.
பெங்களூரு:
கர்நாடக போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கர்நாடகத்தில் ராமநகர், துமகூரு, கலபுரகி, பெலகாவி சிறையில் சட்டவிரோத செயல்கள் நடைபெறுவதாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் இதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டேன். அந்த விசாரணை அறிக்கையின் அடிப்படையில் சட்டவிரோத செயல்களை அனுமதித்த புகாரில் துமகூரு சிறை அதிகாரி பிரவீன் என்பவரை பணி இடைநீக்கம் செய்துள்ளோம். பெலகாவி மத்திய சிறையில் இருந்து மத்திய மந்திரி நிதின் கட்காரிக்கு மிரட்டல் விடுத்த கைதி மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படியும் உத்தரவிட்டுள்ளேன். அந்த கைதி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் சிறைகளில் செல்போன்கள் பயன்படுத்துவதை தடுக்கும் நோக்கத்தில் அதிநவீன ஜாமர் கருவிகளை பொருத்த முடிவு செய்துள்ளோம். சிறைகளில் அவ்வப்போது சோதனை மேற்கொள்ளும்படியும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன். சிறைகளில் சட்டவிரோதமான செயல்கள் நடைபெறுவதை எக்காரணம் கொண்டும் அனுமதிக்க முடியாது.
இவ்வாறு அரக ஞானேந்திரா கூறினார்.