எருதுவிடும் விழாவில் மாடு முட்டி வீரர் சாவு
|சிவமொக்காவில் எருதுவிடும் விழாவில் மாடு முட்டியதில் மாடுபிடி வீரர் உயிரிழந்தார். இதைதொடர்ந்து பலி எண்ணிக்கை 3-ஆக உயர்ந்துள்ளது.
சிவமொக்கா:
சிவமொக்காவில் எருதுவிடும் விழாவில் மாடு முட்டியதில் மாடுபிடி வீரர் உயிரிழந்தார். இதைதொடர்ந்து பலி எண்ணிக்கை 3-ஆக உயர்ந்துள்ளது.
மகர சங்கராந்தி
கர்நாடகத்தில் கடந்த 15-ந் தேதி சங்கராந்தி பண்டிகை கொண்டாப்பட்டது. அன்றைய நாளில் பல்வேறு மாவட்டங்களில் விளையாட்டு போட்டிகள், எருதுவிடும் விழா உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்த நிலையில் சிவமொக்கா மாவட்டத்தில் ஆல்கொலா உள்பட பல்வேறு பகுதிகளில் மகர சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு எருதுவிடும் போட்டிகள் நடைபெற்றது. இதில் ஏராளமான, மாடு பிடிவீரர்கள் பலர் கலந்து கொண்டு மாடுகளை பிடித்து வெற்றி பெற்றனர்.
2 பேர் பலி
கிராம மக்கள் பலரும் போட்டிகளை கண்டு ரசித்தனர். இதில் மாடுகள் முட்டியதில் பார்வையாளர்கள், மாடுபிடி வீரர்கள் உயிரிழந்த சம்பவங்களும் நடந்துள்ளன. இந்த நிலையில் ஆல்கொலா பகுதியில் நடைபெற்ற எருதுவிடும் போட்டியை அந்த பகுதியை சேர்ந்த லோகேஷ் (வயது 32) என்ற விவசாயி வேடிக்கை பார்க்க சென்றார். அந்த சமயத்தில் அவர் மாடு முட்டி உயிரிழந்தார்.
அவருக்கு மனைவி மற்றும் 3 பிள்ளைகள் உள்ளனர். இதேபோல் மாலூர் கிராமத்தில் நடைபெற்ற எருதுவிடும் போட்டியில் ரங்கநாத் என்ற மாடுபிடி வீரர் மாட்டை அடக்க முயன்றார். அப்போது மாடு முட்டியதில் அவர் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற நிலையில், பரிதாபமாக உயிரிழந்தார். இதேபோல் சிவமொக்காவில் பல்வேறு இடங்களில் மாடு முட்டி 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
மற்றொரு வீரர்
அவர்களுக்கு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிவமொக்கா தாலுகா தியாவரே கொப்பா பகுதியில் போட்டியின்போது படுகாயம் அடைந்த ஹரிஷ் (22) என்ற மாடுபிடி வீரர் படுகாயம் அடைந்தார். அவர் சொரப் தாலுகாவில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சொரப் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.