இமாச்சல பிரதேச இடைத்தேர்தல் தோல்வி: மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம் - பா.ஜனதா
|டேஹ்ரா பகுதியில், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட கமலேஷ் தாக்குர், 9 ஆயிரத்து 399 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இமாச்சலப் பிரதேசம்,
இமாச்சலப் பிரதேசத்தின் மூன்று சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்றில் மட்டுமே பா.ஜனதா வெற்றி பெற்றது. மற்ற இரு தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.
இந்த தேர்தல் முடிவுகள் குறித்து அம்மாநில பா.ஜனதா முன்னாள் முதல்-மந்திரி ஜெய்ராம் தாக்கூர் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், "இமாச்சல பிரதேச சட்டமன்ற இடைத்தேர்தலின் மக்களின் இந்த ஆணையை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம், இமாச்சல பிரதேச மக்களின் நலன்களுக்கான போராட்டம், வீதிகளில் இருந்து சட்டசபை வரை தொடரும். இந்தத் தேர்தல்களில் ஏற்பட்ட தோல்வி குறித்து கட்சி நிச்சயம் ஆலோசனை நடத்தும்" என்று ஜெய்ராம் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக இமாச்சல பிரதேசத்தில் மூன்று சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவில் இணைந்ததை அடுத்து அவர்கள் தங்களது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தனர். அவர்களது ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக்கொண்டதையடுத்து, ஹமிர்பூர், நலகர் மற்றும் டேஹ்ரா ஆகிய சட்டபேரவைத் தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து இந்தத் தொகுதியில் ஜூலை 10-ம் தேதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் இன்று முடிவுகள் வெளியானது.
இதன்படி காங்க்ரா மாவட்டத்தின் டேஹ்ரா பகுதியில், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட கமலேஷ் தாக்குர், பா.ஜனதா வேட்பாளர் ஹோஷ்யார் சிங்கை விட 9 ஆயிரத்து 399 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றார்.
ஹமிர்பூர் தொகுதியில் போட்டியிட்ட பா.ஜனதா வேட்பாளர் ஆஷிஷ் சர்மா, காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர் புஷ்பிந்தர் வர்மாவைவிட 1,571 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றார். .
நலகர் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஹர்தீப் சிங் பாவா, பா.ஜனதா வேட்பாளர் கே.எல். தாக்கூரைவிட 8 ஆயிரத்து 990 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.