< Back
தேசிய செய்திகள்
Jharkhand Minister Alamgir Alam resign
தேசிய செய்திகள்

ரூ.32 கோடி பறிமுதல் வழக்கில் சிறையில் உள்ள ஜார்கண்ட் மந்திரி அலம்கீர் ஆலம் திடீர் ராஜினாமா

தினத்தந்தி
|
11 Jun 2024 1:40 PM IST

ஜார்கண்ட் முதல்-மந்திரி சம்பாய் சோரன் அமைச்சரவையில் இருந்து அலமை நீக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியான பா.ஜ.க. கடந்த வாரம் கோரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.

ராஞ்சி,

ஜார்கண்ட் மாநில ஊரக வளர்ச்சித்துறை மந்திரியாக இருப்பவர், அலம்கீர் ஆலம் (வயது 70). காங்கிரசை சேர்ந்த இவரது தனிச்செயலாளர் சஞ்சீவ் குமார் லால் தொடர்புடைய இடங்களில் கடந்த வாரம் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அப்போது சஞ்சீவ் லாலின் வீட்டு வேலைக்காரர் ஜகாங்கிர் ஆலம் தங்கியிருந்த வீட்டில் இருந்து ரூ.32 கோடிக்கு மேல் பணம் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக சஞ்சீவ் குமார் மற்றும் ஜகாங்கிர் ஆலம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த விவகாரத்தில் நிதி மோசடி தடுப்பு சட்டத்தின்கீழ் அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குறிப்பாக மாநில ஊரக வளர்ச்சித் துறையில் நடந்துள்ள முறைகேடுகள் மற்றும் லஞ்சம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. இது தொடர்பாக மந்திரி அலம்கீர் ஆலமை ராஞ்சியில் உள்ள தங்கள் அலுவலகத்துக்கு வரவழைத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த மாதம் 14ம் தேதி விசாரணை நடத்தினர். 9 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தி அவரது வாக்குமூலத்தை பதிவு செய்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து கடந்த மாதம் 15ம் தேதி 2-வது நாளாக அலம்கீரிடம் விசாரணை நடத்தப்பட்டது. 6 மணி நேரத்துக்கு மேல் விசாரணை நடத்திய அதிகாரிகள், இறுதியில் அவரை கைது செய்தனர். இதையடுத்து அவர் நீதிமன்ற காவலில் ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், சிறையில் உள்ள அலம்கீர் ஆலம் தனது மந்திரி பதவியிலிருந்தும், காங்கிரஸ் சட்டமன்ற கட்சியின் தலைவர் பதவியிலிருந்தும் ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராஞ்சியில் உள்ள சிறையில் இருந்து முதல்-மந்திரி சம்பாய் சோரனுக்கு எழுதிய கடிதத்தில், ஆலம் தனது கேபினட் மந்திரி பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார். மேலும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு எழுதிய மற்றொரு கடிதத்தில், ஜார்கண்ட் மாநில காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் பதவியிலிருந்து இருந்து ராஜினாமா செய்கிறேன். ஜார்கண்ட் காங்கிரஸ் கட்சி தலைவராக பணியாற்ற எனக்கு வாய்ப்பளித்த கட்சி தலைமைக்கு நான் நன்றியுள்ளவனாக இருப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

ஜார்கண்ட் முதல்-மந்திரி சம்பாய் சோரன் அமைச்சரவையில் இருந்து ஆலமை நீக்க வேண்டும் என்று அம்மாநில எதிர்க்கட்சியான பா.ஜ.க. கடந்த வாரம் கோரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது. கைது நடவடிக்கைக்கு முன்னதாக, ஆலமிடம் இருந்த நாடாளுமன்ற விவகாரங்கள், ஊரக வளர்ச்சி, ஊரகப் பணிகள் மற்றும் பஞ்சாயத்து ராஜ் ஆகிய 4 இலாகாக்களுக்கு முதல்-மந்திரி சம்பாய் சோரன் பொறுப்பேற்றார்.

மேலும் செய்திகள்