கர்நாடகா: கோர்ட்டு வளாகத்தில் பாகிஸ்தான் ஆதரவு முழக்கம் எழுப்பிய கைதி
|பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியது குறித்து ரவுடி ஜெயேஷ் புஜாரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெலகாவி:
கர்நாடக மாநிலத்தில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடி ஜெயேஷ் புஜாரி ஹிண்டல்கா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். இவன் மீதான சில வழக்குகளில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. சில வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், ஜெயேஷ் புஜாரி மீதான ஒரு வழக்கு விசாரணைக்கு ஆஜர்படுத்துவதற்காக பெலகாவியில் உள்ள கோர்ட்டுக்கு இன்று போலீசார் அழைத்து வந்தனர்.
கோர்ட்டில் ஆஜர்படுத்தியபோது, 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என ஜெயேஷ் புஜாரி முழக்கங்களை எழுப்பினான். இதனைத் தொடர்ந்து சுற்றியிருந்த மக்கள் மற்றும் வழக்கறிஞர்கள் அவனை தாக்கினர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் ஜெயேஷ் புஜாரியை போலீசார் பாதுகாப்பாக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியது குறித்து புஜாரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கோஷம் எழுப்பியது ஏன்? என்பது தெரியவில்லை. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.