< Back
தேசிய செய்திகள்
ஆந்திர முதல்-மந்திரி சென்ற அரசு விமானத்தில் திடீர் கோளாறு: மீண்டும் விஜயவாடா திரும்பியது
தேசிய செய்திகள்

ஆந்திர முதல்-மந்திரி சென்ற அரசு விமானத்தில் திடீர் கோளாறு: மீண்டும் விஜயவாடா திரும்பியது

தினத்தந்தி
|
31 Jan 2023 3:52 AM IST

ஆந்திர முதல்-மந்திரி சென்ற அரசு விமானத்தில் நடுவானில் திடீரென கோளாறு ஏற்பட்டதால் மீண்டும் விஜயவாடா திரும்பியது.

அமராவதி,

ஆந்திர மாநில முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி, உலக முதலீட்டாளர் மாநாட்டுக்காக டெல்லியில் நடக்கும் ஆயத்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக நேற்று மாலை புறப்பட்டார்.

விஜயவாடா கன்னாவரம் விமான நிலையத்தில் இருந்து ஆந்திர அரசு விமானத்தில் அவர் பயணித்தார். அந்த விமானம் பறக்கத் தொடங்கிய 24 நிமிடங்களில் அதில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.

விஜயவாடா திரும்பியது

அதைத் தொடர்ந்து விமானி, மீண்டும் விஜயவாடா விமான நிலையத்துக்கு விமானத்தை திருப்பி வந்து தரையிறக்கினார்.

முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி தனது வீட்டுக்கு திரும்பிவிட்டார். அவர் டெல்லி செல்வதற்கான மாற்று ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்தனர்.

மராட்டிய முதல்-மந்திரி

இதேபோல் மராட்டிய மாநிலம் ஜல்கான் மாவட்டத்தில் நடக்கும் 'பஞ்சாரா கும்ப்' என்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அந்த மாநில முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் இருவரும் திட்டமிட்டு இருந்தனர். இந்த நிகழ்ச்சியில் உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் சிறப்புரை ஆற்ற இருந்தார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவும், துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசும் மும்பையில் இருந்து விமானத்தில் புறப்பட்டனர்.

மோசமான வானிலை

ஆனால் நடுவானில் சென்றபோது விமானம் மோசமான வானிலையில் சிக்கியது. இதன் காரணமாக விமானத்தை மேற்கொண்டு இயக்க முடியவில்லை. இதனால் விமானம் மீண்டும் மும்பை திரும்பி பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.

இதையடுத்து முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவும், துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசும் காணொலி காட்சி மூலமாக நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்