< Back
தேசிய செய்திகள்
பா.ஜனதாவில் இருந்து விலகிய ஜெகதீஷ் ஷெட்டர் காங்கிரசில் சேர்ந்தார்
தேசிய செய்திகள்

பா.ஜனதாவில் இருந்து விலகிய ஜெகதீஷ் ஷெட்டர் காங்கிரசில் சேர்ந்தார்

தினத்தந்தி
|
18 April 2023 12:15 AM IST

பா.ஜனதாவில் இருந்து விலகிய முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே முன்னிலையில் காங்கிரசில் சேர்ந்தார். அவர் உப்பள்ளி-தார்வார் மத்திய தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார்.

பெங்களூரு:

பா.ஜனதாவில் இருந்து விலகிய முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே முன்னிலையில் காங்கிரசில் சேர்ந்தார். அவர் உப்பள்ளி-தார்வார் மத்திய தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார்.

புதுமுகங்களுக்கு வாய்ப்பு

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி ஆளும் பா.ஜனதா இதுவரை 212 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளன. அக்கட்சி இன்னும் 12 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவிக்க வேண்டியுள்ளது.

புதிய முகங்களை அறிமுகம் செய்யும் நோக்கத்தில் கட்சியின் மூத்த தலைவர்களான முன்னாள் துணை முதல்-மந்திரி ஈசுவரப்பா, முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர், முன்னாள் துணை முதல்-மந்திரி லட்சுமண் சவதி போன்றோருக்கு டிக்கெட் நிராகரிக்கப்பட்டு உள்ளது.

பிரச்சினைக்கு தீர்வு

இதனால் கடும் அதிருப்தி அடைந்த லட்சுமண் சவதி பா.ஜனதாவை விட்டு விலகி காங்கிரசில் சேர்ந்துவிட்டார். ஈசுவரப்பா, தேர்தல் அரசியலில் இருந்து விலகிவிட்டார். அவர் தனது மகனுக்கு வழிவிட்டு ஒதுங்கி கொண்டார். அவரை தொடர்ந்து உப்பள்ளி-தார்வார் மத்திய தொகுதியில் ஜெகதீஷ் ஷெட்டர் தனக்கு மீண்டும் டிக்கெட் வழங்கியே தீர வேண்டும் என்று போர்க்கொடி தூக்கினார். இந்த முறை உங்களுக்கு டிக்கெட் கிடையவே கிடையாது என்று திட்டவட்டமாக பா.ஜனதா மேலிடம் கூறிவிட்டது.

ஜெகதீஷ் ஷெட்டர் தனது நிலைப்பாட்டிலும், பா.ஜனதா மேலிடம் தனது நிலைப்பாட்டிலும் உறுதியாக இருந்ததால், இந்த பிரச்சினைக்கு தீர்வு காண அதாவது அவரை சமாதானப்படுத்த பா.ஜனதா மேலிடம் எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிவடைந்தன. மத்திய மந்திரி பதவி வழங்குவதாகவும் ஜே.பி.நட்டா கூறினார். எதையும் ஜெகதீஷ் ஷெட்டர் ஏற்கவில்லை.

காங்கிரசில் சேர்ந்தார்

இதையடுத்து ஜெகதீஷ் ஷெட்டர் நேற்று முன்தினம் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து, சபாநாயகர் காகேரியிடம் கடிதம் வழங்கினார். அதைத்தொடர்ந்து அவர் நேற்று முன்தினம் மாலை உப்பள்ளியில் இருந்து தனி விமானம் மூலம் பெங்களூருவுக்கு வந்தார். இங்கு அவரை காங்கிரஸ் தலைவர்கள் நேரில் சந்தித்து 4 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையின் முடிவில், காங்கிரசில் சேருவதாக ஜெகதீஷ் ஷெட்டர் கூறினார்.

அதன்படி ஜெகதீஷ் ஷெட்டர் நேற்று காலை பெங்களூரு குயின்ஸ் ரோட்டில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு வந்தார். அங்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முன்னிலையில் ஜெகதீஷ் ஷெட்டர் காங்கிரசில் சேர்ந்தார். அவருக்கு கட்சி கொடி வழங்கி, காங்கிரஸ் தலைவர்கள் காங்கிரசில் சேர்த்துக்கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா, அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா உள்ளிட்ட கட்சியின் முன்னணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பி படிவம் வழங்கப்பட்டது

இதையடுத்து ஜெகதீஷ் ஷெட்டரை காங்கிரஸ் கட்சி உப்பள்ளி-தார்வார் மத்திய தொகுதி வேட்பாளராக நிறுத்த முடிவு செய்துள்ளது. மேலும் அவர் அந்த தொகுதியில் போட்டியிட ஏதுவாக பி படிவத்தை மாநில தலைவர் டி.கே.சிவக்குமார் வழங்கினார்.

மேலும் செய்திகள்