போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக்குக்கு ஜாமீன்
|போதை பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக்கிற்கு நிபந்தனை ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
ரூ, 2 ஆயிரம் கோடி போதைப்பொருட்களை வெளிநாடுகளுக்கு கடத்தியதாக சென்னையை சேர்ந்த முன்னாள் தி மு க நிர்வாகி ஜாபர் சாதிக் உள்ளிட்டோர் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இதுதொடர்பாக அமலாக்கத்துறையும் விசாரித்து வருகிறது.
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாமீன் கேட்டு ஜாபர் சாதிக் தாக்கல் செய்த மனுவை டெல்லி போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிபதி சுதீர் குமார் சிரோஹி விசாரித்தார். இதில் ஜாபர் சாதிக் சார்பில் வக்கீல் ஹரிஹரன் ஆஜராகி முன்வைத்த வாதங்களை பதிவு செய்து கொண்ட நீதிபதி, அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
ஒரு லட்சம் ரூபாய்க்கான சொந்த பிணை தொகையையும் மற்றும் அதற்கு இணையான இரு பிணையதாரரின் பிணையையும் அளிக்க வேண்டும். செல்போன் எண்ணை விசாரணை அதிகாரிக்கு வழங்கி அதை எப்போதும் இயக்கத்தில் வைத்திருக்க வேண்டும். பாஸ்போர்ட் ஏதேனும் இருந்தால் அதை ஒப்படைக்க வேண்டும்.
முகவரி மாறினால் அதுகுறித்த விவரத்தையும் விசாரணை அதிகாரிக்கு தெரிவிக்க வேண்டும். இந்த வழக்கின் புலன் விசாரணை முடியும் வரை ஒவ்வொரு மாதமும் முதல் திங்கட்கிழமை போதைப் பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் கையெழுத்திட வேண்டும் என நீதிபதி நிபந்தனை விதித்துள்ளார்.