சுகேஷ் சந்திரசேகரை விட்டு விலகுமாறு நடிகர் சல்மான்கான் சொல்லியும் ஜாக்குலின் கேட்கவில்லை
|ரூ.200 கோடி மோசடி வழக்கில் ஜாக்குலின் நேற்று மீண்டும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் விசாரணைக்கு ஆஜர் ஆனார்.
புதுடெல்லி,
மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகரை விட்டு விலகுமாறு நடிகர் சல்மான்கான் சொல்லியும் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் கேட்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், ரூ.200 கோடி மோசடி வழக்கில் ஜாக்குலின் நேற்று மீண்டும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் விசாரணைக்கு ஆஜர் ஆனார்.
டெல்லியில் தொழில் அதிபர் மனைவியிடம் மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் ரூ.200 கோடி மோசடி செய்த வழக்கில் இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் மீதும் குற்றம் சுமத்தப்பட்டு உள்ளது. மோசடி பணத்தை ஜாக்குலின் பெர்னாண்டசுக்கு சுகேஷ் சந்திரசேகர் அதிகமாக செலவழித்தாக கூறப்படுகிறது. வேறு சில நடிகைகளும் ஆதாயம் பெற்று இருந்ததாக கூறப்பட்டாலும் அவர்களில் பலர் வழக்கின் சாட்சிகளாக மாறிவிட்டனர்.
ஆனால் சுகேஷ் சந்திரசேகர் மீதான நல்ல அபிப்ராயத்தில் அவரை ஜாக்குலின் பெர்னாண்டஸ் விட்டுக்கொடுக்கவே இல்லை என கூறப்படுகிறது. நடிகர்கள் சல்மான்கான், அக்சய்குமார் உள்ளிட்டோர் சொல்லியும் சுகேஷ் சந்திரசேகருடனான தொடர்பை ஜாக்குலின் விடவில்லை. இதனால் அவர் அமலாக்க விசாரணையிலும், பொருளாதார குற்றப்பிரிவு விசாரணையிலும் சிக்கிக்கொண்டு தவிப்பதாக டெல்லி போலீசார் தெரிவித்தனர்.
வழக்கு தொடர்பாக கடந்த புதன்கிழமை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அவரிடம் 8 மணி நேரம் விசாரணை நடத்தினர். இவரை சுகேஷ் சந்திரசேகரிடம் அறிமுகப்படுத்திய பிங்கி இரானியிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது இருவரது வாக்குமூலங்களும் முரண்பட்டன. இந்த நிலையில் ஜாக்குலின் பெர்னாண்டசை போலீசார் மீண்டும் விசாரணைக்கு அழைத்தனர். அதன்பேரில் நேற்று அவர் விசாரணைக்காக ஆஜர் ஆனார். காலை 11 மணிக்கு போலீசார் அவரை வரச்சொல்லி இருந்தனர். அதையடுத்து ஜாக்குலினின் வக்கீல்கள் நேற்று முன்தினம் இரவே டெல்லியில் முகாமிட்டனர். இதனால் காலை 11 மணிக்கு ஜாக்குலின் ஆஜராவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பிற்பகல் 2 மணி அளவிலேயே அவர் விசாரணைக்காக வந்தார்.
அவரிடம் வங்கி கணக்குகள், அவற்றின் பரிவர்த்தனை விவரங்களை போலீசார் கேட்டுள்ளனர். பெற்றோரின் வங்கி பரிவர்த்தனைகளும் கேட்கப்பட்டுள்ளன. அவற்றை சமர்ப்பித்து, போலீசார் கேட்ட கேள்விகளுக்கும் ஜாக்குலின் பதில் அளித்துள்ளார்.
மணிக்கணக்கில் விசாரணை தொடர்ந்தது. அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பதை இந்த விசாரணையின் இறுதியிலேயே அறிய முடியும் என போலீசார் தெரிவித்தனர்.