370 தொகுதிகளுக்கு பா.ஜ.க. இலக்கு - பிரதமர் மோடி
|காஷ்மீர் இளைஞர்கள் வாரிசு அரசியலையும், ஊழலையும் நிராகரித்து விட்டதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.
ஜம்மு,
ஜம்முவில் ரூ.32 ஆயிரம் கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது:-
வாரிசு அரசியலால் காஷ்மீர் பாதிக்கப்பட்டு இருந்தது. தற்போதைய அரசானது மக்களுக்கும், இளைஞர்களுக்கும் சேவை செய்கிறது. குடும்பத்திற்கு அல்ல. வாரிசு அரசியலையும், ஊழலையும் காஷ்மீர் இளைஞர்கள் நிராகரித்து உள்ளனர். வாரிசு அரசியல்வாதிகள், அவர்களுக்கும், குடும்பத்தினருக்கும் மட்டுமே சேவை செய்தனர்.
வளர்ச்சியடைந்த காஷ்மீர் என்பது விரைவில் நிஜமாகும். முன்பு காஷ்மீர் பற்றி தவறான செய்திகள் மட்டுமே வெளிவந்தன.
2013 டிசம்பரில் இங்கு பா.ஜ.க.,வின் லால்கர் பேரணியில் பங்கேற்றபோது, ஜம்முவில் ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். போன்ற கல்வி நிறுவனங்களை ஏன் கட்ட முடியாது என்ற கேள்வியை எழுப்பினேன். அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றி, இன்று ஐ.ஐ.டி மற்றும் ஐ.ஐ.எம். மூலம் மாநிலம் பலன் பெற்றுள்ளது. காஷ்மீர் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளோம். மாநிலம் தற்போது வளர்ச்சி பெற்று வருகிறது. காஷ்மீரில் 12 மருத்துவ கல்லூரிகள் அமைக்கப்பட்டு உள்ளன.
காஷ்மீருக்கு சிறப்பு சட்டம் 370 பெரிய தடையாக இருந்தது. சட்டப்பிரிவு 370 தொடர்பான திரைப்படம் இந்த வாரம் வெளியாகப்போவதாக கேள்விப்பட்டேன். அப்படம், இச்சட்டம் தொடர்பாக மக்களுக்கு சரியான தகவல்களை கொடுக்கும் என்பதால் நல்ல விஷயமாக இருக்கும்.
மாநிலம் வளர்ச்சி பெற, அந்த சட்டத்தை பா.ஜ.க.,அரசு நீக்கியது. தற்போது காஷ்மீரின் உண்மையான முகத்தை மக்கள் அறிந்து கொண்டுள்ளனர். பெண்கள் வளர்ச்சியடைந்து உள்ளனர். 370 சட்டம் நீக்கத்திற்கு பிறகு 370 தொகுதிகளுக்கு பா.ஜ.க., இலக்கு நிர்ணயித்து உள்ளது. ராணுவ வீரர்களை காங்கிரஸ் அவமதித்தது. ஆனால், ராணுவ வீரர்களின் ஒரே பதவி ஒரே பென்சன் திட்டத்தை அமல்படுத்தினோம். காஷ்மீரில் ஓ.பி.சி. பிரிவினருக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. மற்ற மாநிலங்களுடன் காஷ்மீரை இணைப்பு ஏற்படுத்தி வருகிறோம்.
காஷ்மீருக்கு வந்தே பாரத் ரெயில் சேவை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு மட்டும் 2 லட்சம் சுற்றுலா பயணிகள் காஷ்மீருக்கு வந்துள்ளனர். இந்தியாவை 3வது மிகப்பெரிய பொருளாதார நாடாக மாற்றி உள்ளோம்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.