< Back
தேசிய செய்திகள்
யானை தந்தங்கள் மீட்பு; விற்க முயன்ற 5 பேர் கைது
தேசிய செய்திகள்

யானை தந்தங்கள் மீட்பு; விற்க முயன்ற 5 பேர் கைது

தினத்தந்தி
|
8 Jun 2022 8:34 PM IST

சிக்கமகளூருவில், யானை தந்தங்களை விற்க முயன்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 தந்தங்களை பறிமுதல் செய்தனர்.

சிக்கமகளூரு;

தோல், பற்கள் விற்பனை

சிக்கமகளூரு மாவட்டத்தில் தரிகெரே உள்பட பல கிராமங்கள் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளன. இதனால் சிலர் காட்டிற்குள் புகுந்து யானை, சிறுத்தை, புலி உள்ளிட்ட வனவிலங்குகளை வேட்டையாடி வருகின்றனர். மேலும், வேட்டையாடப்பட்ட விலங்குகளின் தோல், பற்கள் போன்றவற்றை எடுத்து வந்த சட்டவிரோதமாக விற்பனை செய்து வருகின்றனர். இது தொடர்பாக வந்த புகாரின் பேரில் வனத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், சிக்கமகளூரு மாவட்டம் தரிகெரே தாலுகா புறநகர் பகுதியில் சட்டவிரோதமாக யானை தந்தம் விற்க முயற்சிப்பதாக சிக்கமகளூரு குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் குற்றப்பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர்.

5 பேர் கைது

அப்போது அந்த பகுதியில் சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்த 5 பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர். பின்னர் அவர்கள் வந்த காரை சோதனை செய்தனர். அதில் 7 கிலோ எடை கொண்ட 2 யானை தந்தங்கள் இருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக 5 பேரையும் கைது செய்த போலீசார், கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர்.

அதில் அவர்கள் தரிகெரே தாலுகா ரோப்லைன் பகுதியை சேர்ந்த சிவக்குமார் (வயது 43), மகான்தேஷ் (32), அண்ணப்பா (33), சந்தோஸ் (34), சிக்கமகளூரு பார்லைன் ரோட்டை சேர்ந்த நூர் அஹாமத் (28) என்பது தெரிந்தது.

அவர்கள் யானை தந்தங்களை விற்பனைக்காக கடத்தி வந்ததும், அப்போது அவர்கள் போலீசில் சிக்கி கொண்டதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், அவர்களிடம் இருந்து ஒரு ஜோடி யானை தந்தங்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்