பெங்களூருவில் விடிய, விடிய சாரல் மழை; உறைய வைக்கும் குளிரால் மக்கள் அவதி
|பெங்களூருவில் இரவு, பகலாக பெய்து வரும் மழையால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர்.
பெங்களூரு:
விடிய, விடிய சாரல் மழை
'மாண்டஸ்' புயல் எதிரொலியாக தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டில் பலத்த மழை பெய்து பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடகத்திலும் பெங்களூரு உள்பட தென்கர்நாடக மாவட்டங்களில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. பெங்களூருவில் இடைவிடாது விடிய, விடிய சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. 3-வது நாளான நேற்றும் காலை முதல் சாரல் மழை பெய்தது. இந்த நிலையில் நேற்று மதியம் திடீரென்று கனமழை கொட்டியது. இதனால் பல பகுதிகளில் சாலைகளில் மழை வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
ராஜாஜிநகர், விஜயநகர், விதான சவுதா, கப்பன் பார்க், சிவாஜிநகர், பசவேஸ்வரா நகர், கெங்கேரி, பேடராயனபுரா, யஷ்வந்தபுரம், கெங்கேரி, கும்பலகோடு, எலகங்கா, பீனியா, எலெக்ட்ரானிக் சிட்டி உள்பட நகர் முழுவதும் மழை பெய்து வருகிறது. வார இறுதி விடுமுறை நாட்களில் பெங்களூரு மக்கள் திரையரங்குகள், கேளிக்கை விடுதிகள், வணிக வளாகங்கள், கப்பன் பார்க், லால்பாக் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று பொழுதை போக்குவது வழக்கம்.
உறைய வைக்கும் கடும் குளிர்
ஆனால் தொடர்ந்து பெய்து வரும் மழையால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கினர். இதனால் மேற்கண்ட பகுதிகள் மக்கள் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடி கிடந்தன. தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக பெங்களூரு நகரில் கடும் குளிர் நிலவி வருகிறது. கடந்த 3 நாட்களாக சூரியன் தென்படவே இல்லை.
உறைய வைக்கும் குளிரால் மலை பிரதேசங்களில் இருப்பதை போல பெங்களூருவாசிகள் உணர்கிறார்கள். கடந்த 3 நாட்களாக பெரும்பாலான வீடுகளில் மின்விசிறிகள், ஏ.சி.களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. வெளியே செல்ல முடியாத அளவுக்கு கடுமையான குளிர் நிலவுவதாலும், வீடுகளின் சுவரும், தரையும் ஜில்லென இருப்பதாலும் மக்கள் கம்பளி போன்ற தடிமனான போர்வைக்குள் சுருண்டு படுத்து தஞ்சம் புகுந்துள்ளனர். அத்தியாவசிய தேவைக்காக வெளியே வருபவர்கள் ஸ்வெட்டர்கள், ஜர்கின் அணிந்து கொண்டு தான் வருகிறார்கள். உறைய வைக்கும் குளிரால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கடும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.
'மஞ்சள் அலர்ட்'
பெங்களூருவில் கடந்த 3 நாட்களில் 4.3 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ள நிலையில், 16.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி உள்ளது. இதற்கிடையே பெங்களூருவில் அடுத்த 3 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இதனால் பெங்களூரு நகருக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. பெங்களூருவை தவிர பெங்களூரு புறநகர், சிக்கமகளூரு, துமகூரு, சிக்பள்ளாப்பூர், சித்ரதுர்கா, கோலார், மண்டியா, ராமநகர் ஆகிய 8 மாவட்டங்களுக்கும் மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.
சுவாசிக்க முடியாமல் குழந்தைகள் பாதிப்பு
பெங்களூருவில் தொடர்ந்து பெய்து வரும் மழை மற்றும் கடும் குளிர் காரணமாக நகர மக்களுக்கு சளி, இருமல் தொல்லை அதிகரித்து உள்ளது. குறிப்பாக பச்சிளம் குழந்தைகள், 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு சளி, இருமல் பாதிப்பு அதிகமாக உள்ளது. குழந்தைகள் சவாசிக்க முடியாமல் அழற்சியால் பாதிக்கப்படுவதும் அதிகரித்து உள்ளது. இதனால் ஆஸ்பத்திரிகளுக்கு சிகிச்சைக்காக வரும் குழந்தைகள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. பெங்களூருவில் பெய்து வரும் மழையை சாதாரணமாக எடுத்து கொள்ள வேண்டாம் என்றும், பெற்றோர் கவனமாக இருக்கும்படியும் டாக்டர்கள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
வடகர்நாடகத்திலும் மழை
பெங்களூரு அருகே உள்ள துமகூரு, கோலார், ராமநகர், மண்டியாவிலும் கடந்த 3 நாட்களாக மழை தொடர்ந்து பெய்து கொண்டே இருக்கிறது. இதனால் மக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. துமகூரு டவுனில் ஞாயிற்றுக்கிழமை தோறும் பூ, காய்கறி சந்தை நடப்பது வழக்கம். ஆனால் நேற்று பெய்த மழை காரணமாக மக்கள் வெளியே வரவில்லை. இதனால் பூ, காய்கறி விற்பனை ஆகாததால் வியாபாரிகள் ஏமாற்றத்துடன் வீடுகளுக்கு திரும்பி சென்றனர்.
கோலாரில் பெய்த மழைக்கு மங்கசந்திரா என்ற கிராமத்தில் 10-க்கும் மேற்பட்ட மரங்கள் விழுந்தன. மேலும் அவரை, ராகி பயிர்கள் சேதம் அடைந்தன. மண்டியா, சிக்பள்ளாப்பூரிலும் பயிர்கள் சேதம் அடைந்தன. இந்த நிலையில் ஆந்திரா, தெலுங்கானா மாநில எல்லைகளையொட்டியுள்ள ராய்ச்சூர், பீதரில் கூட மழை பெய்து வருகிறது. ராய்ச்சூரில் பெய்து வரும் மழைக்கு இதுவரை ரூ.50 லட்சம் பயிர்கள் சேதம் அடைந்து இருப்பதாக விவசாயிகள் கூறியுள்ளனர். இதுதவிர கலபுரகி, ஹாவேரி உள்ளிட்ட சில வடகர்நாடக மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது.